ஆயிரத்தோரு மின்மினிகள் - சிறுகதை.

 


"முற்றும்" எனத் தொடங்கும் அக்கதையை தஞ்சாவூர் ஓவியங்கள் வார்க்கப்பட்ட பச்சைவண்ண சன்னல் திரைச்சீலையின் அருகில் அமர்ந்து பிரபு கூற ஆரம்பித்த அந்நாளில்  சுபாஷினிக்கு புதிதாய் பால் பரு ஒன்று முளைத்திருந்தது. அதனோடு அவளது சுடுமண் நிற நெற்றியில் சிறு செந்தூரக் கீறல். அதே வண்ணத்தின் அடர்த்தியில் பருத்தியில் நெய்த சுடிதார். சித்திரச் சுரூபமாய் பார்த்துக்கொண்டிருந்தவளிடமிருந்து இடையிடையே "ம்ம்ம்"

"ஆயிரம் இம்மிட்ட அதிரூப சுந்தரியே"  பிரபு கதையிலிருந்து சற்று வெளியேறி நகைத்தான். 

இம்முறை அவளிடம் ம்ம்முடன் சேர்த்து சிறு தலையசைப்பு. 

முற்றும் எனத் தொடங்கும் அக்கதையை சாளரத்தை உரசி நின்ற பிறை நிலாவைப் பார்த்தபடி பிரபு கூற ஆரம்பித்தபோது சுவரை ஒட்டி அமர்ந்திருந்த சுபாஷினியின் மலர்க் குழலை நோக்கி மின்மினிப்பூச்சியொன்று தயங்கியபடி ஊர்ந்தது. அந்த மின்மினிப்பூச்சி  ஒருமுறை தனக்கு ஆயிரத்தோரு மின்மினிகள் வேண்டுமென அவர்களது மகள் பூங்கோதை அடம்பிடித்துக் கேட்டதன்பேரில், அவன் ஆறு மாதங்கள் வனவாசம் சென்று பிடித்து வந்தவையுள் கடைசி மிச்சம். மற்ற ஆயிரத்தையும் அவன் வீட்டிற்குள் கொண்டு வந்த மறுகணமே பூங்கோதை பால்கனியில் நின்று " பறந்துசெல்க! இருளில் துவளும் மனிதர்களை நோக்கி" என பறக்கவிட்டிருந்தாள். 

"நிறுத்து..மொத யாரு இதுவள்ளாம்.. கத சோடி சேராத வண்டிமாடுக கணக்கா அதாட்டுக்கு வேற வேற தெசையா பாத்து ஓடுது. "

பிரகாசம் சிகரெட் புகையை அலட்சியமாக ஊதியபடி குறிக்கிட்டான். பிரகாசம் என் கதைநடைக்கு வண்டி மாடுகளை உதாரணமிட்டதில் எனக்கு திருப்திதான்.  ஏனெனில் அவன் கரடிகளை உதாரணமாகச் சுட்டும் பரம்பரையிலிருந்து வந்தவன்.அவனது தாத்தாவான வில்லுச்சாமி ஒருமுறை நூற்றி நாற்பத்தியேழு கரடிகளைக் கடத்தி ,அவற்றை முப்பது லாரிகளில் ஏற்றிவந்து ஒரு பனிவிழும்  நன்மாலைப்பொழுதில்  ஜனத்திரள் நிறைந்த சாலையில் இறக்கிவிட்டு அவற்றின் மீது பட்டாசைக் கொளுத்தி வீசினார். அப்போது அவர் தனது தலையில் சிவப்பு ரிப்பன் ஒன்றைச் சுற்றி அதில் கோழி இறகை சொருகி வைத்திருந்ததை சிலர் பார்த்தார்களாம். 

"இதொரு சாதனை ! இச்சாலைக்கு 'கரடிநிறைச் சாலை' என பெயர் சூட்டுகிறேன் என்றவர் தனது புல்லாங்குழலை இசைத்தபடியே மிரண்டோடிய கரடிகளின் நகர் தாண்டவத்தில் மனம் பறிகொடுத்திருந்தார். அப்போது அவரது பால்யகால நண்பரும் அந்நாள் நகர மன்றத் தலைவருமான திரு.புருஷோத்தமன் அவரது பிருட்டத்தில் கரடியொன்றினால் நீள் வாக்கிலான சிவப்பு நிற பதக்கத்தைப் பெற்று ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்து தான் வீட்டில் எருமைக்குரலோன் என அழைக்கப்படுவதற்கு நியாயம் செய்கிற வகையில் வில்லுச்சாமி எருமை குரலிலயே கர்ஜித்தாராம். 

" புறக்குண்டியிட்ட  புருஷோத்தமா.ஓடாதே! நில்! என் கரடிப் படையைப் பார்"

பிரிட்டிஷ் காவல்துறை அவரை மூன்று நாட்கள் காவலில் வைத்து தகுந்த விசாரணையோடு விடுவித்ததற்குப் பிறகும் பதற்றம் தீர்ந்திருக்கவில்லை. தூங்காநகர மக்கள் யாவரும் கோவில் கோபுரங்களில் சிற்பங்களோடு சிற்பமாய் ஒட்டி நின்று கொட்டாவிவிட்டபடி சொன்னார்களாம்  "போதும். நாங்கள் தூங்க வேண்டும். மாட்சிமை பொருந்திய பிரிட்டிஷ் ராணுவத்தை வர வையுங்கள் " என்று.

மறுநாள் பேட்டிகாண வந்த சுதேசிமித்ரன் செய்தியாளரிடம்  வில்லுச்சாமி தனது விலா எலும்பை பிடித்துக்கொண்டே புன்னகையுடன் கூறினாராம் " நான் இப்போது புதிய மனிதனாகப் பிறந்திருக்கிறேன். " 

"ஏய் மாப்ள. இந்தா.." வில்லுச்சாமியின் கொள்ளுப் பேரன் பிரகாசம் என முகத்திற்கு முன்பு அடுத்த ரவுண்டிற்கான விஸ்கியை நிரப்பி நீட்டினான். அவனது மனதைப் போலவே நீண்ட விசாலமான கரம். மழைக்காற்றில் சாய்ந்த சோளத் தட்டைகளைப் போல் அவனது மணிக்கட்டின் நரை மயிர்கள் வியர்வையில் ஊறிக்கிடப்பதை கவனித்தேன். இரத்தக் கொதிப்பு. அவனது மகள் ஓடிப்போனதற்கு பின்பு தான் அது தீவிரம் பெற்றது என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். உலகமே கொதிக்கிறது. மனிதர்களின் நாளங்களுக்கு மட்டுமென்ன விதிவிலக்கு ?! குடும்பமென்று ஒன்று இல்லையென்றாலும் வயதிற்குரிய  நோய்களும் வந்தே தீரும். நான் சான்று.

முற்றும் எனத் தொடங்கும் அக்கதையை பிரபு சொல்லத்தொடங்கி பாதிதூரத்தில் இருக்கும்போது மின்சாரம் தடைபட்டது.அப்போது சுபாஷினி இருட்டிற்குள்ளிருந்து "  நான் தான் மோகினி. வர பௌர்ணமி வர நாம இருட்டுலயே வாழப்போறோம் "என்றாள். மின்சாரம் திரும்பி வருவதற்குள் சுபாஷினியின் கட்டளையை நிறைவேற்றிட வேண்டுமென ஓடிச்சென்று ஃபீஸ் கட்டையை கழட்டியெறிந்த பிரபு சொன்னான் " நான் தான் ட்ராகுலா. உன் இரத்தத்த குடிக்கப்போறேன் "

முற்றும் எனத் தொடங்கும் அக்கதையை மீண்டும் அவன் பதினைந்து நாள் இருள்வாசம் முடிந்து பௌர்ணமிக்குப் பிறகு கூற ஆரம்பித்தபோது சுபாஷினிக்கு அவன் ஃபஹீனா என புதுப்பெயரிட்டிருந்தான். பதிலுக்கு சுபாஷினி அவனுக்கு முகமது க்யூப் எனப் பெயரிட்டு அவனது மீசையை வழித்துவிட்டாள். பிறகு அது உச்சரிக்கக்  கடினமான இருக்கிறதென "முகமது முகமது முகமது" என்றே அழைத்தாள். பிறகு சொன்னாள் "என் அன்பிற்குரிய முகமது முகமது முகமது. இந்த பர்தா எனக்கு கசகசவென இருக்கிறது. ஆகவே என் பெயரை மாற்றிவிடு "அவன் மாற்றினான்.பகவதியம்மை ! "சான்ட்ரா..பத்மாவதியட்சி. முனீஸ்வரி..அனு..ஜூலியா ராபட்ஸ்..வைஷ்ணவி.." என சுபாஷினிக்கு எழுநூறுக்கும் மேலான நாமங்களை அவன் அதுவரையிலும் சூட்டியிருந்தான்.

பிறகொரு நாள் முற்றும் எனத் தொடங்கும் அக்கதையை சொல் என சுபாஷினி பிரபுவின் தோள்களை வருடியபடி கேட்டபோது அவன் அவளது முன்னெற்றியில் நரை முடி ஒன்று அசைவதைக் கண்டுவிட்டான். உடனே வீட்டிற்கு வரும் நாளிதழை தடைசெய்ததோடு இனி வீட்டில் எவரும் காலண்டரை கிழிக்கக் கூடாது என கட்டளையிட்டான். காலம் உறையட்டுமென கடிகாரங்களின் பேட்டரிகளையும் கழற்றினான். சுபாஷினி அதே போல் பிரபுவை பழிதீர்க்கக் காத்திருந்தாள். பிரபு மேசையில் இடரிக்கொண்டு விழுந்த நாளில் இது அதற்கான வாய்ப்பு எனக் கருதிய சுபாஷினி வீட்டிலுள்ள கட்டில், கபோடுகள் தொடங்கி ஊக்கு வரை அனைத்தையும் முன் பின் தெரியாத எவரோ ஒருவரது முகவரிக்கு அனுப்பிவிட்டாள். அவை திரும்பிய நாள் வரையிலும் அவர்கள் பொருட்களற்ற வாழ்க்கையையே வாழ்ந்தனர்.

"பைத்தியமா ரெண்டும்?" பீரில் நனைந்த டையிட்ட மீசையை துடைத்தபடி எங்கள் நால்வரில் சற்று விவரமான ,நான்கு மகன்களுக்கு தகப்பனான, டிவி மெக்கானிக்காக இருக்கும் தண்டபாணி கேட்டான். அவனிடம் பத்தாயிரத்திற்கும் அதிகமான வீடியோ கேசட்டுகள் வந்ததற்குப் பின்னால் ஒரு கதையுண்டு. ஒருநாள் டிவி பழுது பார்ப்பதற்காக அவன் ஒரு முதியவர் வீட்டிற்குச் சென்றிருந்தான். பழைய சோலிட்டர் டி.வி. அதை தூக்கி கூடத்தில் கிடத்தி அதன் புராதன அறைகளைத் திறந்தபோது ஒரு எலி சாம்ராஜ்யம் அதன் முடிவிற்கு வந்தது. தண்டபாணி தனது திருப்புளியை ஜனநாயகத்தை நிலைநாட்டிய கருவியென்று அழைத்து கெக்கரித்தான். பிறகு தொடங்கினான் " விலை மலிவாக இப்போது நல்ல நல்ல டிவிகள் வருகிறதே.." 

" தெரியும் பா தம்பி. அது அவசியமில்லனு தான் .முடிஞ்சா பாரு இல்லன்னா எழுந்து வெளில போ மயிரே." என அந்த முதியவர் கூறியபோது அவரது வாய் விநோத மிருகமொன்றின் வாய் போல் இருப்பதாகயெண்ணி தண்டபாணி யோசித்தான். அவனுக்குப் புரிந்தது. முதியவருக்கு முப்பத்திரண்டும் தங்கப் பற்கள். ஒரு பல் இரண்டு பவுன். ஆகமொத்தம் அறுபத்திநான்கு பவுன்.டி.வியை பழுதுநீக்கம் செய்துவிட்டு கிளம்பும் தருவாயில் தான் அவனுக்குத் தெரிந்தது அந்த வீட்டிற்குள் எழுப்பப்பட்டிருந்த பிரமாண்ட கரிய தூண்கள் யாவும் வீடியோ கேசட்டுகளின் அடுக்கள் என்பது.முதியவர் சொன்னார் 

"நான் முப்பது ஆண்டுகாலமாக தூர்தர்ஷனில் அன்றாடம் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நாள் தவறாமல் பதிவு செய்து வருகிறேன்" 

"ஏதெனும் சாதனைக்கா ?" தண்டபாணி ஆவலோடு கேட்டான்.

" இல்லை. சும்மா தான் " 

பிறகொரு நாள் அவர் அவனை  வரச்சொல்லி  அழைத்திருந்தார். "அவசரம். சாகப்போகிறேன். ஆனால் நீ அரை மணி நேரம் கழித்து வந்தால் போதும்"

தண்டபாணி தேநீர் அருந்திவிட்டு மீதிச்சில்லரையில் ஒரு தேங்காய் ஃபர்பி வாங்கி மென்றபடியே முதியவர் வீட்டிற்குச் சென்றான்.

" இந்த கேசட்டுகள் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைக்கிறேன். வைத்துக்கொள்" என்றார்.

அதைக் கேட்டு தண்டபாணி நெகிழ்ந்தான். "சரி ஐயா. இதையெல்லாம் நான் என்ன செய்ய வேண்டும். யாரிடமாவது காட்ட வேண்டுமா..செய்தித்தாள். டி.வி சேனல்..சாதனை .."என இழுத்தான்.

முதியவர் அதற்கு " இல்லை. சும்மா வைத்துக்கொள் " என்றார்.

அப்போது அவரது வாய் இயல்பான மனித வாயாக இருப்பது கண்டு தண்டபாணி அதிர்ச்சியுற்றான். "ஐயா..உங்கள் தங்கப் பற்கள் எங்கே ?"

" இனி தேவையில்லையென அவற்றை கழட்டி ஒரு பல்லுக்கு ஒரு காகிதக் கப்பல் என்ற வீதத்தில் முப்பத்தி இரண்டு கப்பல்கள் செய்து பற்களை அதில் வைத்து வைகையில் விட்டுவிட்டேன் " என வாயைத் திறந்து சிரித்த முதியவர் ஒளிபரப்பு நிறுத்தப்பட்ட தூர்தர்ஷனின் ஏழு வண்ணங்களை தனது கண்கள் வழியாக பிரதிபலித்தார். பிறகு தொண்டைக்குழியிலிருந்து கொர் என்றொரு ஓசை .

" எது ஆத்துல விட்டியா..உன்ன போட்டு தெருநாய்.." என எதுவோ சொல்ல வந்த தண்டபாணி முதியவர் மூச்சை நிறுத்திக்கொண்டதைக் கண்டு " உங்களது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் " என மாற்றினான்.

" மாப்ள.." பிரகாசம் என்னை உலுக்கினான்.நான் தொடர்ந்தேன்.

முற்றும் எனத் தொடங்கும் அக்கதையை பிரபு கூற ஆரம்பித்தபோது சுபாஷினி அவனை தரையில் மணல் பரப்பி புதினா வளர்க்கப்பட்டிருந்த அவர்களது குளியலறைக்கு இழுத்துச்சென்று லிட்டர் கணக்கிலான ஊதா நிற இங்க்கை பாத் டப்பில் ஊற்றி நிரப்பத்தொடங்கினால்.

"நீலாம்பரி.." பிரபு அழைத்தான்.

" படையப்பா. உன் பேண்ட்டு சட்டையை அவிழப்பா " சுபாஷினி தனது ஆடைகளை களைத்துக்கொண்டே சொன்னாள். கழட்டி வீசப்பட்ட அவளது மென்திரைகள் யாவும் அடுத்த நிமிடமே வண்ணத்துப்பூச்சிகளாக உருமாறிப் பறந்தன. ஒரு கருப்புநிற பட்டாம்பூச்சியும் அதிலிருந்தது.

" கருப்புநிற பட்டாம்பூச்சி ?." பிரகாசம் விஷமமான பார்வையோடு நகைத்தான். தண்டபாணியும்,கிருஷ்ணனும் அவர்களது நிர்வாணக் கோலத்தைக் கற்பனை செய்துகொண்டிருந்தனர். அப்போது அவர்களது பற்களில் ஊரின் ஒதுக்குப்புறத் திரையரங்குகளில் ஓட்டப்படும் படங்களுக்கான  சுவரொட்டிகளை சுவைக்க நெருங்கும்  கழுதையொன்றின் பற்களில் பொதிந்திருக்கும் குறுகுறுப்பு வெளிப்பட்டது. எனவே பிரபுவும், சுபாஷினியும்  நீலப்பொய்கையில் நிர்வாணமாய் இறங்கி நீராடுவதை விரசமில்லாக் கவிதையொன்றின் வழியாக விவரிக்க முயன்றேன்.அப்போது மதுபான விடுதியில் சப்தத்துடன் ஒலித்த பாடல் என்னை குழப்பிவிட்டது.

"ஓஓ ஓ அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில் கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்..விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்..."

முற்றும் எனத் தொடங்கும் அக்கதையை பிரபு சுபாஷினியின் கன்னங்களை தனது கரங்களால் வழித்து திருஷ்டி கழித்தபடி தொடர முயன்றபோது பூங்கோதை தனது மதிப்பெண் சான்றிதழோடு வந்திருந்தாள்.

"வெரி வெரி பேட்..பெற்றோர் கவனத்திற்கு : பூங்கோதையைப் பற்றி பேச நான் அவரது தந்தையை சந்திக்கவேண்டும். வரும் ஞாயிறு  பூங்காவிற்கு வரலாம்.

ஓ.ஓ..அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்...

அவர் எனக்கு பிடித்த பச்சை சட்டையை உடுத்தி வந்தால் நன்றாக இருக்கும்" 

- மிஸ்.ரெபெக்கா.

பிரபு அதிர்ந்தான். " இங்க பாருடி. உன் பவுனு குட்டி எடுத்துருக்க மார்க்க.. " பெற்றோர் குறிப்பை அவசரமாக அழித்துவிட்டு அவன் சுபாஷினியிடம் முறையிட்டான். பரபரப்பாக  கிளம்பிக்கொண்டிருந்த சுபாஷினி சொன்னாள் " நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

ஓ.ஓ..அர்த்த ஜாமங்களில்.நடக்கும் இன்ப யாகங்களில்.

-எனக்கு இதற்கெல்லாம் நேரமில்லை.. நமது அபார்ட்மெண்ட்டில் இருக்கும் சடை நாய்களில் எது அறிவாளி நாய் எனக்கண்டறிய மொட்டை மாடியில் ஒரு டோர்னமென்ட் நடத்துகிறார்கள். நான் அதில் நடுவர்." 

ஓ..ஓ..அர்த்த ஜாமங்களில்..நடக்கும் இன்ப யாகங்களில்.

"இது எந்தெடா கதா. கதையெண்டால் அது கசாக்கிண்ட இதிகாசமானும். ஈ லோகத்திலயே சிறப்பான கத அதானும். நான் சத்தியம் பறைஞ்சும். விஜயன் போலொரு எழுத்துக்காரன் பாண்டிநாட்டுக்கு இன்னும் எத்தன தவசமானாலும் கிட்டில்லா. பெட்டானு..பிரகாசம் சேட்டா. ஞான் பெட்டு கட்டி..ஞான் கடய எழுதி வைக்கும். " கிருஷ்ணனின் தலை ஓரிடத்தில் நிலைகொள்ளாமல் அசைந்துகொண்டிருந்தாலும் அவனது வாய் நூறாவது முறையாக அதைச் சொல்லிமுடித்திருந்தது. வாந்தி எடுத்தால் அபிஷேக முறையைப் போல் குடம் குடமாக பல வகைகளில் எடுப்பான். கிருஷ்ணன் பாலக்காட்டிலுள்ள கர்ஸக் என்ற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவன். அந்த கிராமம் தான் ஒ.வி.விஜயனின் புகழ்பெற்ற கசாக்கின் இதிகாசம்  நாவலில் வருகிற ஊர் என பீற்றிக்கொள்வான். இங்கு மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் தேநீர் கடை வைத்திருக்கிறான். இவனுடான சகவாசம் எனக்கு சாத்தான் விதித்தது. பல ஆண்டுகளுக்கு முன்னர் எனது அறையில் சிலகாலம் அடைக்கலமிருந்த இவனது சகாக்கள் நக்சல் பின்னணிக் கொண்டவர்கள் என்பது அவர்கள் இங்குள்ள பண்ணையார் ஒருவரை பட்டப்பகலில் வெட்டி நாற்றாங்காலில் தள்ளிவிட்டு கேரளாவுக்கு தப்பியோடியதற்குப் பிறகு தான் எனக்குத் தெரியவந்தது. அந்த நாற்றுகளிலிருந்து விளைந்த அரிசி கூட செந்நிறமாக இருந்ததென்று கிருஷ்ணன் நரம்புகள் புடைக்கக் கூறியபோது நான் எனது அஞ்சல்துறைப் பணியை இழந்து நின்றுகொண்டிருந்தேன். அத்தோடு எனது வாழ்க்கையும் முடங்கிவிட்டது. பிரகாசம் பத்திரப்பதிவாளராக இருக்கும் தனது உறவுக்காரரிடம் எனக்கு எழுத்தர் வேலை வாங்கித்தந்த நாளில் கிருஷ்ணனைப்  பற்றி சொன்னான். 

" இவன பாருவேன். நான் தான் காரணம்னு உங்கிட்ட மன்னிப்பு கேட்டானா. இனி எப்பவும் கேக்கவும் மாட்டியான். காரியக்காரன் மாப்ள. அவன் கடைக்கு போகும்பொதெல்லாம் கவனிச்சிருக்கியா. சாயா குடிங்கன்னு சொல்ல மாட்டியான்.. ஒரு தேவிடியா சிரிப்ப சிரிச்சிவுட்டு "சாயா எடுக்கட்டா"னு கேப்பான். நம்மாளுவ சிலபேரு சாப்பிடுனு சொல்லாம சாப்பிடுறியானு கேக்குற மாதிரி. எல்லாத்துக்கும் கணக்கு வைச்சிருப்பியான். இவன் நம்மகூட தண்ணியடிக்க ஆரம்பிச்சது கூட அப்படித்தான். " பிரகாசத்தின் கணிப்பை இத்தனை ஆண்டுகளில் ஒருமுறை கூட கிருஷ்ணன் பிழையாக்கவில்லை. இவன் இப்படித்தான் என முழுமையாகத் தெரிந்துவிட்டதால் இவன் எங்களுக்கோர் சுமையாகவும் இருப்பதில்லை.

" சிகரெட்டு இருக்கா.." தண்டபாணி கேட்டான்.சட்டைப்பையை துலாவி ஒடிந்திருந்த ஒன்றை எடுத்து நீட்டிவிட்டு தொடர்ந்தேன்.

ஓஓ அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்..

முற்றும் எனத் தொடங்கும் அந்தச் சோர்வூட்டும் கதையை தீபாவளி குறிக்கிட்டதால் பிரபு அன்று மட்டும் கூறாமல் நிறுத்தி வைத்திருந்தான். தனக்கு வான வேடிக்கைகளை அன்னாந்து பார்த்து சலித்துவிட்டது. குனிந்து பார்க்கவேண்டும் எனப் பூங்கோதை கூறியபோது சுபாஷினியும் ஆமாம் எனக்கும் அது தான் ஆசை என விரல்களை உதறினாள். ஆகவே சூரியன் அடங்கியதும் பிரபு பனிக்கற்களைக் கொண்டு வைகையாற்றங்கரையில் ஆல்ப்ஸ் சிகரத்தை விட மூன்று மடங்கு உயரமான கோபுரம் ஒன்றினை அமைத்தான். பூங்கோதை காலடியில் சிதறும் சாயப்பொரிகளில் கண்ணுற்றிருந்தாள். காலணிகளை மறந்துவிட்டுவந்திருந்த சுபாஷினி குளிரினால் கால்கள் விரைத்து நடுங்க பிரபு அவளை தனது கரங்களில் ஏந்தியணைத்து இதமூட்டினான். வெள்ளித்தாரகைகள் புடைசூழ வான் தேவதைகளாய் நின்ற அவர்கள் இறக்கைகளை விரித்து உலகின் மீது நேசத்தை விசிறினர். விடியலின் முதல் ஒளி கோபுரத்தைத் துளைப்பது கண்டு கோபுரம் இன்னும் சற்று நேரத்தில் உருகிவழிந்துவிடும் என பூங்கோதை கத்தினாள். மூவரும் கீழே இறங்கிவரும்வரை இளங்காலை பொறுமை காத்தது. பிறகு முதலை மந்தையொன்று தனது அத்தனைப்  பற்களையும் ஒருசேரக் கடிக்கும் ஓசையோடு பனிக்கோபுரம் நொறுங்கி விழுந்தது.மதியத்திற்கெல்லாம் வைகை காவிரியாகியிருந்தது. ஆகையால் அந்த ஆண்டு முழுமைக்கும் வைகைக் கரையை ஒட்டிய ஊர்களில் உள்ள பூங்கோதையைப் போன்ற இளம் தளிர்கள் பசியின்றி உறங்கச் சென்றனர்.

"ஆஆவோ.." தண்டபாணி அசிங்கமான குரலில் போதைச்சோம்பல் முறித்தான். நான் அவனை முறைத்துவிட்டுத் தொடர்ந்தேன். 

முற்றும் எனத்தொடங்கும் அந்த முடிவுறாக் கதையை விட்ட இடத்திலிருந்து தொடங்க பிரபு முயன்றபோது சுபாஷினி "ம்ம்ம்.. ம்ம்ம்..ம்ம்ம். அர்த்த ஜாமங்களில்.. நடக்கும் இன்ப யாகங்களில் " என வாய்க்குள் முனகியபடி ஓவியம் ஒன்றைத் தீட்டிக்கொண்டிருந்தாள்.

" என்ன அது கிருஸ்த்துவின் கடைசி விருந்தா "பிரபு நெருங்கிச் சென்று சுபாஷினியைப் பின்னாலிருந்து அணைத்தான்.

" இல்லை. உனது கதாப்பாத்திரங்களும்.அவர்களது மதுபான மேசையும். "

பிரகாசம், தண்டபாணி, கிருஷ்ணன் மூவரும் அதிர்ந்த முகத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.நான் தொடர்ந்தேன்.

பிரபு சுபாஷினியின் கையிலிருந்த தூரிகையை வாங்கி அவளது மூக்கில் ஒரு சிவப்பு புள்ளிவைத்துவிட்டுத் தொடர்ந்தான்.நண்பர்களில் மூவர் அவரவரது பாதையில் நடந்தனர்.  ஒருவன் மட்டும் மதுபான விடுதியின் வாயிலில் நின்றுகொண்டிருந்தான். இரவோடு சேர்ந்துகொண்டு ஆயிரமாயிரம் முறை பயமுறுத்திய பின்னரும் கூட தனிமைக்கு அவன் மீது கருணை பிறக்கவேயில்லை.

"அவன் மெடிக்கல் செக்கப்பிற்கு செல்கிறானா ?" சுபாஷினி கேட்டாள்.

"இல்லை. அவன் அதை விரும்பவில்லை. அவன் ஆஸ்பத்திரியில் எழும் வாடையை எமனின் அக்குள்களிலிருந்து எழும் நாற்றம் என்பான். தற்போது சிறுநீர் அடிக்கடி கட்டிக்கொள்கிறது என அவன் நண்பர்களிடம் சொல்ல வாயெடுத்து பிறகு தவிர்த்துவிட்டான். "

பழைய நாளிதழ்களும், தளர்வுற்ற டூத் பிரஸ்ஸும், வற்றிப்போன லைஃப் பாய் சோப்பும் அடங்கிய ஒற்றை அலமாரியைக் கொண்ட அந்த சிறிய அறைக்கு அவனையன்றி வேறு துணையில்லை என்பதால் அவன் அதை நோக்கி நடந்தான். வாயிற்க் கதவைத் திறந்து காற்றை உடன் அழைத்துக்கொண்டான். கனியாமலே வெம்பி விழும் பூச்சியரித்த பலாவைப் போல் பாயில் சரிந்தான்.  மின்விசிறி அவனது மேற்சட்டையில்லாத அலங்கோலமான உடலைச் சகித்துக்கொண்டது. கால்களை பார்வையிலிருந்து மறைக்கும் அவனது உயர்ந்த வயிற்றிற்குள் சாலையோர டிபன் சென்ட்டரில் தின்ற கல்தோசை நொதிக்கத் தொடங்கியிருந்தது. மது அழுகிய காற்றாக மார்பில் மோதி ஒவ்வொரு  மூச்சிலும் நாறியது. விடியற்காலையில் உள்ளே புளித்துக்கிடக்கும் யாவற்றையும் கக்க வேண்டும். அவனுக்கு இப்போது உணவும் கொடும் நினைவுகளைப் போல் மாறிவிட்டது. பகற்கனவுகளில் மட்டும் சுழன்றலையும் அவனுக்கு நினைவேகத்தை உண்டாக்கும் சம்பவங்களே வாழ்வில்  நிகழ்ந்திருக்கவில்லை. அவன் திறந்த அறைகள் யாவற்றிலும் சோகமே பலவிதமான உருவை எடுத்து அமர்ந்திருந்தது. ஓர் அறையில் அவன் காட்டுப்பள்ளிக்கூடத்தில் அரிசிச் சோற்றிற்காக தள்ளுமுள்ளாடும் காட்சி.  அடுத்ததில் அவனது தாய் தந்தையரின் அந்திம ஓலம். இன்னொரு அறையில் அவன் இச்சைகொண்ட பெண்கள் எல்லோரும் அவர்கள் விரும்பியவர்களோடு கூடித்திளைக்கும் உற்சவம். கிண்டல்கள்; அவமானங்கள் நிறைந்த நாட்களை ரப்பரைப் போல் இழுத்து நீட்டிக்கச்செய்வதற்கென்றே ஓர் அறை. அவனது தூசிப்படலம் நிறைந்த கட்டடத்தில் மரணமே அவன் திறந்து பார்க்கவேண்டிய இறுதி அறையாக எஞ்சியிருந்தது. ஆனாலும் அவன் நாளை நாளை என அதன் சாவியை பத்திரப்படுத்திக்கொண்டே வந்தான். அன்றிரவும் அவன் தன் இமைகளை மூடிக்கொண்டு நிஜம் போலவே தோன்றச்செய்யும்  நற்கனவுகளை  வழங்கிடவேண்டி இரவிடம் பிராத்தனை செய்தான். எனினும் அவன் வேண்டிடாத ஒன்றே அவனுக்குக் கிடைத்தது. மற்ற இரவுகளில் வாய்த்ததைப் போலவே. ஆமாம் அவன் கனவுகளேயின்றி உறங்கிக்கொண்டிருந்தான். ஆகையால் விடியலின் போது ஏக்கங்களுக்கு இடமில்லை. நல்லிரவில் அவனது அச்சங்கள் விலகியிருந்தன. அதுவரை சூட்டுக்கோல் போல் எரிந்த தேகம் தணிந்திருந்தது. உறக்கத்திலயே அவன் வினவிக்கொண்டான், இந்த நித்ய அமைதியை தனக்கருளியது யார்?! ஆழ்ந்து உறங்கிவிட்டதால் அவன் அன்றும் அதைப் பார்க்கவில்லை. 

"எதை ?" சுபாஷினி பிரபுவின் விழிகளில் கோர்த்திருந்த கண்ணீரைத் துடைத்தபடி கேட்டாள்.

"பூங்கோதை பறக்கவிட்ட ஆயிரம் மின்மினிப் பூச்சிகள் அவனுடல் மீது அமர்ந்திருந்ததை..."

Comments

Popular posts from this blog

கூந்தல் பனை-சிறுகதை

செவலை- சிறுகதை