Posts

Showing posts from June, 2020

கூந்தல் பனை-சிறுகதை

Image
                                                                    1 தாத்தா இறந்துவிட்டார் என்று செய்தி வந்திருந்தது. நான் தங்கியிருந்த அறையின் உரிமையாளர் வீட்டில் இருக்கும் லேன்ட் லைனிற்கு அழைத்து அப்பா தகவல் சொல்லியிருந்தார். கையில் இருந்த புத்தகத்தை மேசை மீது வைத்துவிட்டு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். போய்த்தான் ஆகவேண்டும். விடியும் வரை ஏன் காக்கவேண்டுமென அரைமணி நேரத்தில் கோயம்பேடு பேருந்து நிலையம் வந்துவிட்டேன். பேருந்து கிளம்பியபோது மணி இரண்டு. எனது தாத்தாவின் பெயர் மு.வெங்கடாசலம். இல்லை மு.வெங்கடாசலம் சேண்டபிரியர் Ex ஐ.என்.ஏ. அப்படித்தான் அவர் தனது அடையாளத்தை இறுதிவரை சுமந்தார். இரண்டு மூன்று மாதங்களாக மனிதருக்கு நடமாட்டமே இல்லை. அதற்காக ஒரேடியாக படுக்கையிலும் வீழ்ந்துவிடவில்லை. உயிரும் கூட உறக்கத்திலயே தான் பிரிந்திருக்கிறது. நல்ல சாவு. பேருந்து தாம்பரத்தில் நின்று கூடுதலாக சில பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தது. மெட்ராஸிற்கு இனி வரவேக்கூடாது என்கிற அயற்சியை வெளிப்படுத்தும் முகத்துடன் ஒரு முதியவர், பின்னிரவு நேரத்திலும் சட்டையை இன