கூந்தல் பனை-சிறுகதை

                           

                                        1

தாத்தா இறந்துவிட்டார் என்று செய்தி வந்திருந்தது. நான் தங்கியிருந்த அறையின் உரிமையாளர் வீட்டில் இருக்கும் லேன்ட் லைனிற்கு அழைத்து அப்பா தகவல் சொல்லியிருந்தார். கையில் இருந்த புத்தகத்தை மேசை மீது வைத்துவிட்டு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். போய்த்தான் ஆகவேண்டும்.
விடியும் வரை ஏன் காக்கவேண்டுமென அரைமணி நேரத்தில் கோயம்பேடு பேருந்து நிலையம் வந்துவிட்டேன். பேருந்து கிளம்பியபோது மணி இரண்டு. எனது தாத்தாவின் பெயர் மு.வெங்கடாசலம். இல்லை மு.வெங்கடாசலம் சேண்டபிரியர் Ex ஐ.என்.ஏ.
அப்படித்தான் அவர் தனது அடையாளத்தை இறுதிவரை சுமந்தார். இரண்டு மூன்று மாதங்களாக மனிதருக்கு நடமாட்டமே இல்லை. அதற்காக ஒரேடியாக படுக்கையிலும் வீழ்ந்துவிடவில்லை. உயிரும் கூட உறக்கத்திலயே தான் பிரிந்திருக்கிறது. நல்ல சாவு. பேருந்து தாம்பரத்தில் நின்று கூடுதலாக சில பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தது. மெட்ராஸிற்கு இனி வரவேக்கூடாது என்கிற அயற்சியை வெளிப்படுத்தும் முகத்துடன் ஒரு முதியவர், பின்னிரவு நேரத்திலும் சட்டையை இன் செய்திருந்த சில சலிப்பூட்டும் ஆண்கள் என அடுத்துடுத்து ஏறினர். அவர்களும் என்னைப் போன்ற மருந்து விற்பனர்களாக இருக்கலாம். இறுதியாக எங்காவது அவசரமாக போய்க்கொண்டிருக்கும் போது மட்டுமே காணக்கிடைக்கிற அழகிகளில் ஒருத்தி. கும்பகோணத்தில் இறங்கிக்கொள்வாள் என்பதை அவளது வகிடெடுத்த நெற்றி உணர்த்தியது. காதுகளை உரசும் கூந்தலும்,நீல நிற விளக்கொளியை உறிஞ்சி எண்ணெய்ப் பிசுபிசுப்பினால் மின்னும் கன்னங்களும்..ம்ம்ம். இரண்டு இருக்கைகளுக்கு முன்னால் அமர்ந்து மறைந்துவிட்டாள்.

பேருந்துக்கு வெளியே வேகமெடுத்து நகர்ந்த இருட்கோடுகளும், ஒளிப்புள்ளிகளும் தாத்தாவின் கடந்தகாலத்தை நினைவுறுத்தின. அப்போது ஆறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன் என நினைக்கிறேன். மாவட்ட ஆட்சியர் அன்று மேகங்கள் இருள்வதற்கு முன்பாகவே விடுமுறை அறிவித்திருந்தார். அவரது மனதிற்காகவே மழை நின்று நிதானித்துப் பெய்யத்தொடங்கியிருந்தது. அந்த பகல்பொழுது வீட்டுத் திண்ணையில் ஒண்டி உணக்கையுறுவதற்கென்றே வாய்த்திருந்தது. நாட்டு ஓடுகளின் வழியாக சீரான அலைவரிசையில் வழிந்த நீர் தரையில் வட்ட வட்ட வடிவில் மணல் சித்திரங்களை வரைந்துகொண்டிருந்தது. வாசல்
கழுவி விட்டதைப் போல் சுத்தமாகக் கிடந்தது.
நான் பயின்ற பள்ளியிலயே பணி நியமனம் கிடைக்காமல் தற்காலிக ஆசிரியராக இருந்த அப்பா பள்ளியிலிருந்து மிதிவண்டியில் வீட்டிற்கு வந்தபோது தான் மிதிவண்டியின் தடம் பட்டு வாசலின் கலங்கமில்லாத மழைநனைத்த சருமம் சற்று அழகிழந்தது. தாத்தா திண்ணையில் கிடந்த மர நாற்காலியில் அமர்ந்திருந்தார். அந்த நாற்காலியில் தான் எப்போதும் அமர்ந்திருப்பார். அந்த நேரங்களில் துண்டு பெரும்பாலும் அவரது மடியிலயே கிடக்கும். வலது காலை ஆட்டிக்கொண்டேயிருப்பார். குடும்பத்திற்கு ஆகாது என ஆத்தா திட்டினாலும் அதை அவர் காதில் போட்டுக்கொண்டதில்லை. எவ்வளவு குளிராயினும் மேற்சட்டை உடுத்த மாட்டார். அந்த வயதிலும் தொய்ந்திடாத தட்டையான மார்பு அவருக்கு. சொல்லப் போனால் தாத்தா அப்பாவை ஒரு அமட்டலில் அமர வைத்துவிடுவார். ஐ.என்.ஏவில் அவர் சமையலோ அல்லது வேறு எடுபிடி வேலைகளையோ செய்யவில்லை என்பதைக் கூற சுபாஷ் சந்திரபோஸ் வரவேண்டியது இல்லை. அதைச் சொல்ல தனித்தனியாகப் பிரிந்து உரமேறி நிற்கும் அவரது தோள்பட்டைகள் போதும். மூக்குப் பொடியென்ன டீ காபி கூட அருந்த மாட்டார். ஆனால் சாப்பிட உட்கார்ந்து விட்டார் என்றால் மட்டும் கிளப்புவது கடினம். லெட்டினுக்கு போனார் என்றாலும் இதே கதை தான். மிதிவண்டியை நிறுத்திவிட்டு திண்ணையில் ஏறிய அப்பா என்னை கண்டும் காணாதது போல் நடுகூடத்திற்குள் நுழைந்தார்.
நான் பக்கத்து வீட்டு சிறுவர்களோடு சேர்ந்து ராஜா ராணி விளையாடிக்கொண்டிருந்தேன். மழைக்கால விளையாட்டுகளில் அதுவே எப்போதும் எங்களுக்கு முதன்மையானது.
ஒரு கை குறைந்தால் சில நேரங்களில் தாத்தாவையும் விளையாட்டில் இணைத்துக்கொள்வோம். நான் தான் திருடன் என்பது போல் பொய் பாவனைகளைச் செய்து போலீஸாக இருப்பவனை குழப்பும் யுக்தியோ அல்லது ராஜா சீட்டில் ஏதேனும் அடையாளம் வைத்து எடுக்கும் தந்திரமோ தெரியாததால் அப்போதெல்லாம் தாத்தா தான் புள்ளி வரிசையில் கடைசி ஆளாக வருவார்.
தாத்தாவை வழக்கம் போல் காரணமே இல்லாமல் கரித்துக்கொட்டியபடி ஆத்தா கடலையையோ அல்லது அரிசியையோ வறுத்து எடுத்து வந்து வைக்கும்.

ஒரு பெரிய இடி இடித்தது. அருகில் அமர்ந்திருந்த சிறுவன் அர்ஜுனா என்றான். அவனது தாத்தாவின் பெயரும் அதுதான். அதைக் கேட்டு எனது தாத்தா சிரித்தார்.

"நல்லா கூப்ட டா..காவந்து பண்ண ஆளு.
அவனே இந்நேரத்துக்கு பயந்துபோய் பரலோகத்துல உன் ஆத்தா கொடங்கைக்குள்ள ஒளிஞ்சுக் கிடப்பான்" 

அடுத்த இடி எங்கள் ஊரில் தான் எங்கோ விழுந்திருக்கிறது என அச்சப்படும் அளவிற்கு பயங்கரமாக இருந்தது. தாத்தா அசராமல் கால் ஆட்டிக்கொண்டிருந்தார். அந்த இடி என் வீட்டில் தான் விழுந்திருக்கிறது எனக் கூறும் அவசரத்தில் ஓடிவருவது போல் அந்நேரம் பார்த்து தெற்குத் தெருவைச் சேர்ந்த உறவினர் ஒருவர் தன்னோடு இன்னொரு நபரை அழைத்துக்கொண்டு எங்களது வீட்டிற்கு வந்தார்.

தாத்தா "பிச்ச..ஏன் இப்படி ஓடி வர..வழுக்கும் பாத்து." என்றார்.

"மொத வா..உள்ள.."

"மாமா இவரு தெரியுதா யாருனு? நம்ம மணியாரமூட்டு மாப்ள."

"ம்ம்ம். என்ன சேதி.."

வந்தவர் "ஒன்னுல்ல மாமா.கம்மளாச்சேரி எஸ்.சி வூட்டு ஆளுவோ மாப்ள மேல கேஸு ஒன்னு கொடுத்துட்டானுவோ.நடவு வேலைக்கு வந்த பொம்பளய அடிச்சு போட்டாப்ளனு.அவ என்னமோ சாடையா பேசிருப்பா போலிருக்கு.அதுக்குன்னு.." என இழுத்தார்.

"அதுசரி. இந்தாப்பா என்ன ஆச்சு"

"அது பேசிக்கலாம் பெரியவரே. நீங்க வரியலா?"
உறவினரோடு வந்தவர் அலட்சியமான தொனியில் தாத்தாவை அவசரப்படித்தினார்.

தாத்தாவுக்கு ஆத்திரம் ஏறியது "எங்க வரியலா?என்ன ஒங்கூட்டு மாட்டுக்காரப்பயல கூப்பிடுற மாதிரி கூப்பிடுற"

"அதுல்லங்க.."

"என்ன அதுல்ல..எதாவது தெளிவா சொல்றியா நீ மொத?"

"இந்தாருங்க. மாமா சொன்னாப்ளனு தான் வந்தன். நீங்க என்ன இப்படி பேசுறிய."

அதற்கு தாத்தா ஏதோ பேச.பதிலுக்கு அவர் ஏதோ கூற பேச்சு வளர்ந்தது.
நான் கீழே குனிந்து கூட்டாளி குலுக்கிப்போட்டச் சீட்டை எடுத்தேன். சீட்டைப் பிரித்த கணத்தில் சப்பென்று ஒரு சப்தம். எனக்கே விழுந்தது போல் இருந்தது. அப்படியொரு அறை.
உறவினரோடு வந்தவர் கன்னத்தில் கைவைத்தபடி உறைந்து போய் நின்றிருந்தார்.

"ஓடுறா..ஒல்க்ககுடிக்கு.மணியாரமூட்டு மாப்பிள்ளைனா. என்ன திமிரு மயிரா" தாத்தா கையை உதறியபடி மீண்டும் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார். என்ன சொல்வதென்று தெரியாமல் வந்தவர்கள் வீட்டிலிருந்து நகர்ந்தனர். பிறகு விசியம் கேள்விப்பட்டு தாத்தா வயதுடைய ராசலிங்கம் வீட்டிற்கு வந்தார். அவர் சொல்லுக்கு மட்டும் தான் தாத்தா சற்று அடங்கிப்போவார்.

"ஏ..அந்தப் பய என்கிட்டயே மரியாத இல்லாம திமிர்த்தனமா பேசுறான். அவன் பக்கம் என்ன ஞாயம் இருக்கப்போவுது."

"அதுக்குன்னு கை நீட்டுவியா. உன்கிட்ட போய் சேதி சொல்ல வந்தானுவ பாரு"

"சரி இதுக்காவ தான் ஓடியாந்தியா. போ ராசலிங்கம். பேசிக்கலாம்"

"உனக்கு என்ன. நூறு குழி கூட இல்லன்னாலும் உக்காந்த இடத்துக்கு பென்சன் வருது. வய வரப்புல நின்னுப்பாத்துருந்தா வேலைக்கு வரவனுவ அடிக்கிற நட்டன என்னன்னு தெரிஞ்சிருக்கும்"
அவர் தாத்தாவிடம் வருத்தப்பட்டு பேசிவிட்டு நகர்ந்தார்.

தாத்தாவை எக்காலத்திலும் எவராலும் புரிந்துகொள்ளவே முடியாது. அந்தந்த நேரத்து எண்ணங்களும் முடிவுகளும் தான் அவர். அவர் சீர்திருத்தவாதியெல்லாம் இல்லை. ராசு பத்தன்..சுப்புக் கோணான்..வெள்ளாள வூட்டு ஆளு என சாதிப் பெயரை பயன்படுத்தி தான் மனிதர்களை நினைவில் வைத்துக்கொள்வார். நெற்றியில் விபூதி பட்டையிட்டுக்கொண்டு வந்து அவரிடம்
முத்துராமலிங்கத் தேவரையும், சுபாஷ் சந்திர போஸையும் பற்றி பேசினால் எதை வேண்டுமானாலும் அவரது தலையில் கட்டி விடலாம். ஒரு துணி வியாபாரி அந்த வழிமுறையைப் பயன்படுத்தி நிறைய வெள்ளைச்சட்டை பிட்டுகளை தாத்தாவிடம் விற்றிருக்கிறார். ஆத்தா எவ்வளவு திட்டினாலும் வாங்கிக்கொள்வார். ஆனால் சில நேரங்களில்  ஆத்தா ஒன்றும் செய்யாமல் இருக்கும்போதே பெரிய காரணங்களே இல்லாமல் ஆத்தாவிடம் கோபித்துக்கொண்டு கையில் இருப்பவற்றை எல்லாம் போட்டு உடைப்பார். அந்தக் கணக்கில் எனக்குத் தெரிந்தே ஒரு நேஷனல் கம்பனி ரேடியோ, ஒரு முகம் பார்க்கிற சிங்கப்பூர் கண்ணாடி, இரண்டு கைக் கடிகாரங்கள் குப்பை மேட்டிற்கு சென்றிருக்கின்றன. நான் பள்ளிக்கூடத்தில் ஒருமுறை என்னை அடித்த ஆசிரியர் ஒருவரை திருப்பி அடிக்க கை ஓங்கிவிட்டேன். அப்பா மூலம் அந்த விசியத்தைக் கேள்விப்பட்டு தாத்தாவிற்கு ஏக சந்தோசம். அன்றிரவு
மணியன் கடைக்கு அழைத்துச்சென்று பரோட்டா எல்லாம் வாங்கிக்கொடுத்தார். ஆனால் இன்னொரு முறை வீட்டிற்கு வந்திருந்த எனது அத்தை மகளோடு சண்டை போட்டு கோபத்தில் அவளை கடித்து வைத்துவிட்டேன் என தாத்தா தனது பெல்ட்டை எடுத்து என்னை வெளிர் ஓட்டிவிட்டார். தடுக்க எவருமே அருகில் வரவில்லை. வரவும் முடியாது.
தாத்தா இப்படித்தான்.
ஐ.என்.ஏவின் வீழ்ச்சி அவரது மனதில் வடிக்கமுடியாத சீழாக கட்டியிருக்கிறது, காலத்தின் தகிப்பில் அது வெளிவந்துவிடக்கூடாது என்பதற்காகவே தாத்தா தன்னை கரடுமுரடாக ஆக்கிக்கொண்டிருக்கிறார் என்பது எனக்கு பின்நாளில் தான் புரிந்தது. லட்சியவாதங்கள் தடயமின்றி வீழ்ந்தபின் அதை ஏந்தியவர்களின் வாழ்வு இன்னும் இறுக்கமடைந்துவிடும் என எங்கோ வாசித்த ஞாபகம்.

அப்போது திண்ணையில் அமர்ந்து முழாண்டு தேர்வுக்காக படித்துக்கொண்டிருந்தேன். பின்மதிய வெயிலின் மீது அடர்த்தி குன்றிய கார்மேகங்கள் படர்ந்திருந்ததால் வாசல் மஞ்சள் பூசிக்கிடந்து..தாத்தா நாற்காலியில் அமர்ந்தபடி பல்லில் மாட்டியிருந்த கறி நுணுக்குகளை  எடுத்துக்கொண்டிருந்தார்.

"வாப்பா..எந்தூரு பத்திரிகை ?"

திருமணப் பத்திரிகை கொடுக்க வந்த ஒருவரை தாத்தா வரவேற்றார்.

"ஒரத்தநாடுங்க"

பத்திரிகையை வாங்கிய நொடியில் தாத்தாவின் முகம் மாறியது.

"என்ன இது..பேரக்காணும் ?"

"எழுதிருக்குங்களே?"

"வெறும் வெங்கடாசலம்னு மட்டும் எழுதிருக்கு ?
முழு பேரு எங்க ? "

"இல்லங்க..எனக்கு தெரியாது.அவங்க எழுதி கொடுத்து விட்டது தான்."

தாத்தா பத்திரிக்கையை இன்னொரு முறை உற்றுப்பார்த்தார்.

"சுயமரியாதை திருமணம்..இதென்ன? மத்தவனெல்லாம் சுய மரியாதை இல்லாம கல்யாணம் பண்ணிக்கிறானா "

"ஐயா பெரியார் முறைப்படி நடத்துற கல்யாணம்ங்க"

"என்ன எழவோ.பேரு எங்கயா?"

"ஐயா..அதான்…"

"இந்தா இத கொண்டு போயி இத எழுதிக்கொடுத்தவன்கிட்டயே தந்து பேர முழுசா எழுதி வாங்கிட்டு வா"

"எதாவது வியாக்கியானம் பேசிகிட்டே இருங்க...தம்பி அந்த பத்திரிகைய என்கிட்ட கொடுப்பா…" அப்பா கூடத்திலிருந்து எழுந்து வந்தார்.

"நீ உன் வேலைய பாருடா...மயிரு"
தாத்தா அப்பாவை அதட்டிவிட்டு அந்தப் பத்திரிகையை வாசலில் எறிய கையை ஓங்கினார். பிறகு சில விநாடிகள் யோசித்துவிட்டு அதை வந்தவர் கரங்களில் அடித்து நீட்டினார். 

அப்பாவால் தாத்தாவைக் கட்டுப்படுத்த இயலாது. தாத்தாவிற்கு வருகிற ஐ.என்.ஏ பென்சனில் தான் குடும்பம் பொருளாதார நெருக்கடி இல்லாமல் நகர்கிறது என்பது அப்போது வீட்டில் எல்லோருக்கும் தெரியும். எனினும் அந்தக் காலகட்டத்தில் எனக்கு தாத்தாவின் மீது கட்டற்ற வெறுப்புணர்வு பெருகியிருந்தது. இவர் எப்போது இறப்பார் என்றெல்லாம் இரகசியமாக என்னை நானே கேட்டுக்கொண்டிருந்திருக்கிறேன்.
இதோ எனது பால்யப் பருவ ஆசை நிறைவேறியிருக்கிறது.


2

பேருந்து ஒரு சாலையோர வழிப்பறி கூடாரத்திற்கு வெளியே  நின்றுகொண்டிருந்தது. அடிவயிறு முட்டியது. ஒரு மூத்திர ப்ரோக்கர் எனது கையைப் பிடித்து இழுக்காத குறையாக ஒரு கழிப்பறை நோக்கி அழைத்துச்சென்றான். நவீன சினிமா;நவீன இலக்கியம் என்று கூறுவது போல் அது ஒரு நவீன கழிப்பறை.
இதில் என்ன நவீனத்துவம் வேண்டிக்கிடக்கிறது என்று கேட்டால் ஐம்பது நூறு பிடிங்கிக்கொள்வார்கள் என்கிற பயத்தில் வாயை மூடிக்கொண்டேன். தாத்தாவாக இருந்திருந்தால் அங்கு பெய்யாதே இங்கு பெய்யாதே என்று கட்டளை பிறப்பித்தவனை கீழே தள்ளி அவன் மீதே பெய்ந்திருப்பார்.

தாத்தாவிற்கு மனிதர்கள் மீது பற்றுதல் இருந்ததா இல்லையா எனத் தெரியாது. ஆனால் அவர் ஆத்மார்த்தமாக இரண்டு மரங்களை நேசித்தார். அவற்றில் ஒன்று எங்களது வீட்டிற்கு வலது புறமாக இருக்கிற கூந்தல் பனை மரம். அதற்கு தன்னுடைய வயதிருக்கும் என தாத்தா கூறுவார். வில்வமும்,கூந்தல் பனையும் எல்லா இடங்களிலும் முளைப்பதில்லை, பனையில் கூந்தல் பனை தெய்வக் கடாச்சம் நிறைந்தது என்பார். இறைருளின் அடையாளமாய் நிற்கும் அம்மரம் ஒரு நாள் கண்டிப்பாக குருத்து வெடித்து பூத்துக்குலுங்கும், அத்தோடு விதைகளையும் நிலத்தில் கொட்டும் என்று  சொல்லிக்கொண்டேயிருந்தார். மாலை நேரங்களில் அவரது மர நாற்காலி வாசலுக்கு வந்துவிடும். அதில் அமர்ந்து நெற்றியைச் சுருக்கியபடி அந்தப் பனையின் உச்சியை பார்த்துக்கொண்டிருப்பார். அவர் அன்புசெய்த இன்னொரு மரம்
ஆற்றை ஒட்டியிருக்கிற எங்களது ஐம்பது குழி நிலத்தில் வீற்றிருந்தது. அது மருத மரம். எனினும் அதை மரம் என்றேக் கருத முடியாது. அதை வானுயர்ந்த ஒடிசலான பாறை   எனலாம். கிளைகளே விடாமல் தொண்ணூறு அடி உயரத்தில் நீண்டு திரண்டிருக்கும் அம்மரத்தையும் தாத்தா தெய்வம் என்று தான் கருதினார். தாத்தாவுடைய கரங்கள் இரண்டும் நெல் குத்தும் உலக்கையைப் போல் இருக்கும். அவர் போல் உடல் அமைப்புடைய மூன்று நபர்கள் ஒன்றிணைந்தால் கூட அந்த மரத்தைக் கட்டிப்பிடித்து அணைக்க முடியுமா என்றால் சந்தேகம் தான். அத்தனைப் பெரிய மரம். அரிவாளை அதன் மீது போட்டால் கை தென்னி அதிரும். அதிலிருந்து ஒரு சில்லைப் பெயர்ப்பதும் கடினம் தான். அந்த மரத்தை ஒட்டியோடும் ஆற்றிற்கு பெரியாறு என்று பெயர். அளவில் அத்தனைப் பெரிய ஆறு இல்லையென்றாலும் ஓர் ஓடையை விட அகலமும் ஆழமும் உடையது. மழைக் காலங்களில் எல்லாம் இரண்டாள் மட்டத்திற்குக் கூட நீர் நிமிர்ந்து ஓடும். ஆண்டொன்றிற்கு ஒரு சிறுவனாவது அதில் அடித்துச்செல்லப்பட்டு இரண்டு ஊர்கள் தள்ளியிருக்கின்ற மதகில் பிணமாக தூக்கப்படுவான். பங்காளி வீட்டு அத்தை ஒருத்தியும் அப்படித்தான் அதில் மாண்டாள். அந்த ஆற்றின் வடக்குக் கரை எங்களது ஊர் என்றால் தெற்குக்கரையில்  பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலங்களும், பதினைந்து இருபது குடிசை வீடுகளும் இருக்கும். அவ்விடத்தை மாஞ்சேரி என்று அழைப்பார்கள். ஆற்றின் குறுக்கே பாலம் கிடையாது. மாஞ்சேரிக்கு செல்லவேண்டும் என்றால் ஆற்றில் இறங்கித் தான் கடக்க வேண்டும். நீர் நிறைந்து ஓடினால் அதுவும் இயலாது. அங்கிருப்பவர்கள் பெருமாள் கோயில் நிலங்களில் கூலி வேலை செய்பவர்கள். நிலங்களை நிர்வகித்து வந்த எங்கள் ஊரின் பிள்ளைமார்கள் அந்நிலங்கள் மீது கவனம் செலுத்த மாட்டார்கள். விவசாயம் அங்கு பெயருக்குத் தான் நடக்கும். கூலியாட்களாக இருக்கக்கூடிய மாஞ்சேரி ஆட்கள் கூலிக்காக இவர்களிடம் எப்போதும் தொங்க வேண்டும். ஆற்றைக் கடந்து வருவது சவால் என்பதால் மாஞ்சேரிப் பெண்களால் இக்கரைக்கு வந்து வயல் வேலைகளில் ஈடுபட முடியாது. நீர் குறைந்திருந்தால் மட்டும் வருவார்கள். நீந்தத் தெரிந்த வீட்டு ஆண்களை வைத்துத்தான் கஞ்சி குடித்தார்கள். நீரில் இறங்காமல் ஆற்றைக் கடக்க வேண்டுமென்றால் மூன்று கிலோ மீட்டர்கள் சுற்றித்தான் வர வேண்டும். யாருக்கேனும் எதேனும் மருத்துவ அவசரம் என்றால் நிலமை இன்னும் மோசம். இழுத்துக்கொண்டிருக்கும்போதே பலருக்கு பாடை தயார் ஆகிவிடும். அந்த வகையில் பாம்புக் கடி மரணங்கள் நிறைய நிகழ்ந்திருக்கின்றன.

3

"லேய் அங்க போகாத.பூச்சி பட்டு இளையும்"
ஆற்றிற்குள் மாரளவு நீரில் நின்றபடி தாத்தா என்னை நோக்கி குரல் எழுப்பினார். நான் அரிசியை மென்றபடி ஆற்றில் கோரை மண்டிக்கிடந்த இடத்தில் இளைந்த தண்ணீர் பாம்பை அடிக்க கல் தேடிக்கொண்டிருந்தேன்.
சிறு வயதில் நான் எப்போதும் ஒரு கைப்பிடி அளவு அரிசியை அள்ளி கால் சட்டைப்பைக்குள் வைத்துக்கொள்வேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொறிப்பேன். தாத்தா எவ்வளவு தின்பண்டங்கள் வாங்கித்தந்தாலும் எனது அரிசிக்கு செத்த வாய் சும்மா இருந்ததேயில்லை. சோகையாகிவிடுவாய் என அம்மா திட்டிக்கொண்டேயிருக்கும்.

"ஏ யய்யா..நல்லாருப்ப. போய் சாமி மரத்துகிட்ட நில்லு.இந்தா வந்துட்டன்"
தாத்தா மீண்டும் குரல் கொடுத்தார்.

நான் அங்கிருந்து நடந்து மருத மரத்தடிக்கு வந்தேன். கன்னத்தை மரத்தில் உரசியபடி அதன் உச்சியை அன்னாந்து பார்த்தேன்.
எத்தனை முறை அவ்வாறு நோக்கினாலும் எனக்கு மலைப்பு தீருவதேயில்லை. இலைகளின் மெல்லிய அசைவும்,மரப்பட்டையில் கமழ்ந்த வாசமும் என்னை பரவசப்படுத்தின.

"ஐயயோ...என் புள்ள…"
திடீரென்று ஆற்றிலிருந்து ஒரு பெண்ணின் அரவம் கேட்டது. நான் மீண்டும் ஆற்றங்கரைக்கு ஓடி வந்தேன். மாஞ்சேரியைச் சேர்ந்த ஒரு பெண் ஆற்றிற்குள் தெப்பமாக நனைந்த உடலுடன் நின்று அழுதுகொண்டிருந்தாள். நீரின் வேகத்தில் அவளது கால்கள் தள்ளாடின. தாத்தாவைக் காணவில்லை. எனக்கு பயம் கூடிவிட்டது. தாத்தா தாத்தா என்று கத்தினேன். தாத்தா அந்தப்பெண்மணி நின்றிருந்த இடத்திலிருந்து சற்று தொலைவில்  நீருக்குள்ளிருந்து எழுந்தார். அவரது கையில் ஓர் இரண்டு வயது சிறுமி மயங்கிய நிலையில் கிடந்தாள். தாத்தா வேக வேகமாக கரைக்கு வந்து அந்தக் சிறுமியின் உடலை தலைகீழாக தூக்கி முதுகில் தட்டினார். சிறுமியிடம் அசைவில்லை. அச்சத்தில் எனக்கு படபடவென்று வந்தது. சில நொடிகளில் அழத்தொடங்கவிட்டேன்.

"ஐயோ..ஐயோ.."
அந்தப் பெண் கரையில் கிடந்து அழுது புரண்டுகொண்டிருந்தாள்.

"ஏ இந்தாடி.வாய திறந்தினா சிலுவாய  பேத்துபுடுவன். இத்தனூன்டு புள்ளய தூக்கிகிட்டு ஆத்துகுள்ள இறங்கிட்டு..கூதி.. அமத்துடு"
தாத்தா ஆத்திரத்துடன் கைவோங்க அந்தப் பெண் குரலைத் தாழ்த்துக்கொண்டார்.

நீர் வாயிலிருந்து ஓரளவிற்கு வடிந்தபின் தாத்தா அந்த சிறுமியை நேர்நிலைக்கு தூக்கி காதுகளிலும் வாயிலும் பலம் கொண்டு ஊதினார். திடீரென மூச்சிரைந்து இருமிய அது வீல் என்று கத்தியது. முதுகில் தடவிவிட்டபடி தாத்தா சிறுமியை அந்தப் பெண்ணிடம் நீட்டினார். பிறகு துண்டை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு மருத மரத்தடிக்கு வந்து வேரிலிருந்து கொஞ்சம் மண்ணை எடுத்து அதன் நெற்றியில் பூசிவிட்டார்.

"சுத்தி போடி..என்ன வலிக்குதா நடக்க.."

டீ குடித்துவிட்டு அந்தப் பிள்ளைக்கும் ஏதேனும் வாங்கித்தரும்படி தாத்தா கரையில் கிடந்த தனது சட்டையிலிருந்து பத்து ரூபாயை எடுத்து அந்தப் பெண்ணிடம் நீட்டினார்.

வீட்டிற்கு வந்ததும் தாத்தா முதல் வேலையாக என்னை அனுப்பிக் கடுதாசிகளை வாங்கிவரச்சொன்னார். அவருக்குள் ஏற்கனவே அந்த எண்ணம் இருந்திருக்க வேண்டும். பாலம் ஒன்று அமைத்துத் தரக்கோரி யார் யாருக்கோ கடிதம் போட்டார். எல்லாவற்றிலும் அனுப்புநர் என்ற இடத்தில் அவரது பெயரோடு சேர்த்து ex.ஐ.என்.ஏ என்பது தவறாமல் இடம்பெற்றிருந்தது. கடிதத்தின் உள்ளடக்கத்திலும் அதை குறிப்பிடாமல் அவர் விடுவதில்லை. நான் இந்த ரெஜிமென்டில் இருந்தவன்,இதெல்லாம் செய்தவன் என்றெல்லாம் கூட அதில் அவசியமின்றி எழுதி வைப்பார். எனக்கு அதைக் காணும்போது எரிச்சலாக வரும். அவர் அனுப்பிய கடிதங்களுக்கு விண்ணப்பம் கிடைக்கப்பெற்றது என்று பதில் தகவல் தருகிற கடிதங்கள் மட்டுமே வந்தன. தாத்தா சோர்ந்து போனார். தனது கடந்தகாலத்திற்கு ஒரு மரியாதையும் இங்கு இல்லை என்பது அவருக்கு பொறிதட்டியதைப் போல் அப்போது விளங்கியிருக்க வேண்டும். இந்த ஆட்சிமுறையே ஒரு கோமாளிக் கூத்து என்று சலித்துக்கொண்டார். ஊரில் இருக்கின்ற அரசியல் பிரதிநிதிகள் கூட அந்தப் பால விவகாரத்தில் எவ்விதமான முக்கியத்துவத்தையும் தரவில்லை. நாமே செலவு செய்து ஒரு தட்டிப்பாலமாவது அமைப்போம் என்று தாத்தா யோசனை கூறியபோது முதலில் சிலர் ஒத்துக்கொண்டனர்.
பிறகு அவர்களும் பின்வாங்கிக்கொண்டனர்.
தாத்தாவின் வீம்பு எந்த எல்லை வரை செல்லும் என்பதை அப்போது தான் நான் அறிந்துகொண்டேன். முழு செலவையும் தானே செய்வதாக முடிவுசெய்து ஆசாரியை பார்த்து விசியத்தைக் கூறிவிட்டு வந்தார். எனக்குத் தெரிந்து ஒரு காரியத்திற்காக தாத்தா இன்னொருவர் வீட்டு வாசற்படியை மிதித்தது அதுவே முதல்முறை. வருகிறேன் வருகிறேன் எனக் கூறிக்கொண்டிருந்த ஆசாரி தாத்தா சொன்ன சேதியை பொருட்படுத்தவேயில்லை. அந்தப் பால வேலையில் ஈடுபடக்கூடாது என பெருமாள் கோயில் நிர்வாகத்திலிருந்து அவருக்கு கெடுபிடிகள் வந்திருந்தது பின்னால் தான் தெரிந்தது. ஒரு காலை தாத்தா ஆசாரி வீட்டிற்கு சென்று 'அந்த மவனே.. இந்த மவனே' என அவருக்கு பாட்டுவிட்டுக் கட்டிவிட்டு வீட்டிற்கு வந்தார். மாலை வரை தீவிரமான யோசனையில் இருந்தார். அவரது மனம் அமைதியில்லாமல் வெதும்பியது. எனக்கு அப்போது அவரது முகத்தை பார்க்கவே தைரியம் இல்லை. அவரைப் போல் நானும் கூனிக்குறுகினேன். அவர் சுமக்கின்ற அடையாளம் எத்தனை அற்பமானது. இந்த அடையாளமா ஒருகாலத்தில் அவரை தீவிரமான விடுதலை உணர்வோடும்,தேசத்தையேப் புறட்டிப்போட்டுவிட வேண்டும் என்கிற  வேட்கையோடும் சுற்றியலைய வைத்தது என என்னையே வினவிக்கொண்டேன்.
இருள் கசிகிற சமயத்தில் தாத்தா சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு நேராக ஆற்றிற்கு வந்து நீரில் இறங்கினார். அவரது பார்வை அவர் ஏதோ ஒன்றில் தீர்மானமாக இருப்பதைக் காட்டியது. மறுகரைக்கு நீந்திச்சென்றவர் விறுவிறுவென மாஞ்சேரியை நோக்கி நடந்தார்.

"டேய்..எத்தன ஆம்பள இருக்கிய இங்க?"

"ஐயா..பதினைஞ்சு பேரு இருப்போம்ங்க..எதுக்குங்க.."

"சரி எல்லா ஆம்பளையலும் என்கூட வாங்க."

"எங்கங்க?"

"சொல்லனுமா..மயிரு வாங்கடாங்குறன்"

தாத்தாவின் வேகத்திற்கு ஈடுகொடுத்து அவர்களால் நடக்க முடியவில்லை. அவர்களோடு ஊருக்குள் நுழைந்து நேராக பெருமாள் கோயிலின் தேர் நிறுத்தப்பட்டிருக்கும் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அந்த மண்டபத்தின் கதவுகள் சார்த்தப்பட்டு பூட்டு போடப்பட்டிருந்தது. தாத்தா அருகில் இருந்த ஒரு வீட்டிற்கு சென்று ஒரு சிறிய வேலை எனக்கூறி கடப்பாரையை வாங்கி வந்தார். பத்தாவது நிமிடத்தில் பூட்டு வாயைப் பிளந்துகொண்டது.

"உள்ள போய் தேர் இழுக்குற வடத்த தூக்கிட்டு வாங்கடா"

"ஐயா..எதாவது சொல்லப்போறாங்க"
மாஞ்சேரி ஆள் தயங்கினார்.

"போங்கடாங்குறன்ல..எவன் என்ன சொல்றான்னு பாக்குறன்"

கயிறு எங்களது ஆற்றை ஒட்டி அமைந்திருக்கும் எங்களது கொல்லைக்கு எடுத்து வரப்பட்டு அங்கிருந்த மருத மரத்தின் உச்சியில் கொண்டு பிணைக்கப்பட்டது. மாஞ்சேரியிலிருந்து ஐந்து கோடாரிகள் வந்திருந்தன. அவற்றில் நன்கு காய்ச்சல் போடப்பட்டிருந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து தாத்தா தனியே எடுத்து வைத்தார். பிறகு ஒரு எலுமிச்சைப் பழத்தை இரண்டாக அறுத்து அவற்றின் உள்புறத்தில் குங்குமத்தைத் தடவி மரத்தின் வேர்களில் வைத்தார். சூடம் ஏற்றப்பட்டு பாலும் ஊற்றப்பட்டது. எல்லோரையும் வணங்க சொல்லிவிட்டு தானும் வணங்கினார். பிறகு தாத்தா கோடாரியை நின்று நிதானமாக மரத்தின் அடிப்பகுதியில் போட்டார். மாஞ்சேரி ஆட்களில் இருவர் சற்று தள்ளி நின்று அவர்கள் பங்கிற்கு வீசித்தொடங்கினர். இரவு முழுக்க ஒரு மணிநேரம் கூட ஓயவில்லை. அவ்வளவு வெட்டியும் விடிந்தபோது மரத்தின் அடிபாகத்தில் கால்வாசிக்கூட சிதைக்கப்பட்டிருக்கவில்லை. எல்லோரும் சோர்ந்து அமர்ந்துவிட்டனர். சிலருக்கு உள்ளங்கையில் தோல் பிய்த்துக்கொண்டு ஊன் வடிந்தது. வீட்டிலிருந்து கஞ்சி காய்ச்சி எடுத்து வரப்பட்டது. அங்கு நாற்காலி இல்லை. மாஞ்சேரி ஆட்கள் தாத்தாவிற்கு சமமாக அமர்ந்து கஞ்சி குடித்தனர். தாத்தா சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு மீண்டும் கோடாரியை எடுத்தார். மீண்டும் அதே வேகம். அழுத்தம் திருத்தமாக நிதானமாக வீசினார். கோடாரி மரத்தில் மோதும்போது எழுகிற ஓசை ஒருமுறைக்கு ஒருமுறை இம்மிளவும் மாறவில்லை. நூறு போடு போட்டார் என்றால் நூறும் நிகர்ந்து வைத்தார்ப்போல் சமமான திடத்தில் விழுந்தன. மாலையில் ஊரே கூடி நின்றுகொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் மரம் விழப்போகிறது. எனக்கு ஈரக்குலை நடுங்கியது. கரையிலிருந்து தூரமாக ஓடி நின்றுகொண்டேன். அங்கு நின்றிருந்தவர்கள்
தாத்தாவிற்கு மரை கழண்டுவிட்டதாக காதுபட பேசினர். நான் அதை கேட்காததைப் போல் நின்றேன். எனக்கும் அதுதான் பட்டது. இன்னொருபுறம் ஆச்சரியமாகவும் இருந்தது. ரோஷம் அறிவையும்,வாழ்வின் யதார்த்தத்தையும் மீறிச்செல்வது மனித இயல்புகளில் ஒன்று தான். அந்தக் கொதிநிலை நிரந்தரமானதல்ல. தோன்றிய வேகத்தில் அடங்கிவிடும். ஆனால் அது அமிழ்வதற்குள் அந்தப் பெரு வெடிப்பைச் சுமக்கிறவன் இன்னும் ஓரடி முன்னே பாய்ந்தால் எனில் அசாதாரணமான காரியங்கள் உறுதியாக நிகழ்ந்துவிடும்.

இரவு கவிழ்ந்திருந்தது. அந்த மரத்தைச் சுற்றி கழித்துப்போட்ட மனிதச் சதைகளைப்போல் மரத்தின் சிதறல்கள் விரவிக்கிடந்தன. அவற்றை கூடைகளில் அள்ளிச்சென்று உலர்த்தினாலே ஒரு குடும்பம் பல நாட்களுக்கு அடுப்பெரிக்கலாம். அடிப்பாகத்தின் சுற்றளவில் பாதிக்கு மேல் வெட்டப்பட்டிருந்த மரம் சாய்வதற்கு தயார் நிலையில் நின்றது. அந்த இருளில் தாத்தா மீது பதிந்திருந்த ஊராரின் பார்வையில் உடலை துளைக்கின்ற ஏளனம். அவர் அதை தனது கரங்களில் வடிந்துகொண்டிருந்த வேர்வையோடுச் சேர்த்து வழித்துப்போட்டார். அவர் கொஞ்சமும் கீழ்மையை உணரவில்லை. அந்த நிகழ்வு மொத்தமும் அவரது புதையுண்ட பழைய நாட்களை மீட்டுருவாக்கம் செய்திருக்க வேண்டும்.

மாஞ்சேரி ஆட்களோடு அக்கரைக்குச் சென்று கயிற்றைப் பிடித்துக்கொண்டு வயலில் இறங்கினர். தாத்தா வித்தியாசமான ஒரு ராகத்தில் சப்தம் எழுப்பினார். மற்றவர்களும் அதற்கு பதில் அளிக்கும் விதத்தில் கத்தினர். மரம் முதல் முறையாக அசைந்துகொடுத்தபோது எனக்கு மார்பு இரைந்தது. கண்களுக்கு முற்றிலும்  பழக்கமில்லாத,இயற்கைக்கு மீறிய காட்சி ஒன்று நிகழப்போவதை போல் அசௌகரியம் சூழந்திருந்தது. அடுத்த நொடியில்
வானம் உயரமுள்ள ஒரு பிரம்மாண்ட மிருகத்தின் முதுகெழும்பு முறிவதைப் போல் நெடுநெடுவென்று ஓசை எழுந்தது. நான் கண்களை மூடித்திறந்தபோது மரம் அக்கரையின் மீது சாய்ந்திருந்தது.மரம் வீழ்ந்த இடத்திற்கு அருகில் இருந்த கரையான் புற்றொன்று அதிர்வு தாளாமல் கொட்டியிருந்தது. ஆற்று நீரும் அரையடி தூரம் அலையை எழுப்பியதாக கரையில் நின்றிருந்தவர்கள் கூறினர்.
ஆற்றின் இரண்டு கரைகளுக்குமிடையே பாலமாகிக் கிடந்த அந்த மருத மரத்தின் உண்மையானத் தோற்றத்தை அப்போது தான் என்னால் விளங்கிக்கொள்ள முடிந்தது.அதில் இரண்டு நபர்கள் தாராளமாக அருகருகே படுத்துக்கொள்ளலாம். எத்தனை பெரிய வெள்ளமும் அதனை விரலளவும் நகர்த்திவிட முடியாது. மரமிருந்த இடத்தில் மிகப்பெரிய வெறுமை. எனக்கு அழுகை பீறிட்டது.
துண்டை உதறி தோளில் போட்டபடி 
தாத்தா அங்கிருந்து வீடு நோக்கி நடந்தார்.
அதன்பிறகு அவர் அந்த ஆற்றங்கரைக்கு தனது வாழ்நாளில் ஒருமுறை கூட வரவேயில்லை.
பின்னாளில் அந்த மரம் மீது மாஞ்சேரி சிறுவர்கள் பள்ளிச் சீருடையில் வரிசையாக நடந்துவந்தக் காட்சியை ஒருமுறைக் கண்டேன். அது ஓர் அரிதானக் கருப்பு வெள்ளைப் புகைப்படம் போல் என்னுள் தங்கிவிட்டது. நான் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்திருந்தபோது உள்ளாட்சிக்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது எனது ஊரின் உள்ளாட்சித் தலைவர் பதவிக்கு ரிசெர்வ் வேட்பாளரே நிற்க முடியும் என்கிற நிலை உருவானதால் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த புள்ளவராயர் வீட்டு ஆள் தனது வயலில் பணிபுரிந்த மாஞ்சேரியைச் சேர்ந்த சண்முகம் என்கிற ஒருவரை வேட்பாளராக நிறுத்தி அரசமைப்பிற்கு தண்ணீர் காட்டிவிட்டு மீண்டும் ஊராட்சித் தலைவர் ஆகிக்கொண்டார்.
அதேநேரத்தில் சண்முகம் சற்று விவரமானவர், அந்த வாய்ப்பைக்கொண்டு ஆற்றுக்கிடையே சிமெண்ட் பாலம் கொண்டு வந்துவிட்டார். தாத்தாவின் பெயரை உச்சரித்து அத்தனை வெயில் மழையையும் தாங்கிக்கிடந்த மரம் அதன் பிறகு தான் ஓய்வுநிலையை எட்டியது. சிமென்ட் பாலத்தின் வேலை முடிவுற்ற பிறகு மெல்ல மெல்ல அது தன்னை சிதைத்துக் கொண்டது.

ஊருக்குள் நுழைந்தேன். வாசலில் ஒரு பெஞ்ச் கிடத்தப்பட்டிந்தது. அதில் கரையான் அரித்த பழங்காலத்துத் துப்பாக்கியைப் போல் தாத்தா மலர் மாலைக்குக் கீழ் படுத்திருந்தார். பாதி உடம்பு தான் இருந்தது.
அப்பா இறுதிச் சடங்கிற்கு ஆகவேண்டிய வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆத்தா தாத்தாவின் தலைமாட்டில் அமர்ந்திருந்தது. அதை தாத்தா அப்படியொன்றும் நிற்கதியாக விட்டுவிட்டுச்செல்லவில்லை. அது உயிருடன் இருக்கும் வரை தாத்தாவிற்குரிய பென்ஷன் தொகை அதற்கு வரும். அதனால் அம்மாவும் அதனிடம் எதற்கும் முகத்தை நீட்டமாட்டாள். வாசலில் பெரிய கூட்டமில்லை. தாத்தா போட்டு வைத்திருந்த சண்டைகளுக்கு வந்திருந்த எண்ணிக்கையே அதிகம் தான்.
மாஞ்சேரியிலிருந்து சிலர் மட்டும் வந்திருந்தனர். அவர்களும் தாத்தாவை தங்களது அன்புக்குரிய மனிதராகக் கருதவில்லை, அவர்களில் இப்போதுள்ள இளைஞர்களுக்கு தாத்தா எந்த வகையிலும் முக்கியம் இல்லை என்ற யதார்த்தம் என்னை உறுத்தியது.

தாத்தாவைப் பாடையில் ஏற்றியபோது மேலைக்காற்று வீசியது. அதோடு ஒரு அலாதியான வாசமும் கமழ்ந்து வந்தது. அது பனையின் செறிவான வாசம்.
ஏதேச்சையாகத் திரும்பினேன். கூந்தல் பனை மரத்தின் உச்சியில் சரம் சரமாக வெளிர் மஞ்சள் நிறப் பூக்கள் மலர்ந்து தொங்கிக்கொண்டிருந்ததைக் கண்களை விலக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.
கூந்தல் பனை தனது வாழ்நாளின் இறுதியில் பூக்கும். அத்தோடு அது தனது ஆயுளை முடிந்துக்கொண்டு,சிறுகச் சிறுக பட்டு வீழ்ந்து மண்ணிற்கு தன்னை ஒப்புக்கொடுத்துவிடும். கூந்தல் பனையைப் போல் தாத்தாவும் தனது வாழ்வில் ஒரே ஒருமுறை பூத்தார். அது துப்பாக்கி ஏந்தியபடி மலாய்க்காடுகளில் சுற்றியலைந்தபோதல்ல, மாறாக கோடாரியை பிடித்தபடி ஆற்றங்கரையில் வியர்வை வழிய வழிய நின்றிருந்தபோது. ஊரில் எத்தனையோ வகை மரங்கள் இருந்தாலும் இந்தக் கரடுமுரடான மரம் காணக்கிடைக்காத அபூர்வம் தான்.
மரங்களைப் போல் ஊரில் எத்தனையோ வகை மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் தாத்தாவை விட நல்லவர்கள் தான்.
பெருங்கோயிலுக்கு தொண்டாற்றிய அறங்காவலர்கள், எத்தனைக் கோபத்திலும் கொடுஞ்சொற்களையே பயன்படுத்தாதவர்கள், உயிர்களை உணவுக்காக கூட கொல்லாதவர்கள், இரகசியமாக உள்ளே மட்டும் வைத்துக்கொண்டு வெளியே சாதி என்கிற சொல்லைக் கூட உதிர்க்காதவர்கள் என எத்தனை வகை நல்லவர்கள்?! ஆனால் வெறும் பத்தே, பதினைந்து குடும்பங்களுக்காக தான் வணங்கிய தெய்வத்தைப் பெயர்த்து போடக்கூடிய நெஞ்சம் அவர்கள் எவரிடத்திலும் இருந்திருக்கவில்லையே. பாடை ஆற்றங்கரையோரத்திற்குச் சுமந்து வரப்பட்டது. நான் ஆற்றின் மீது பார்வையைப் பதித்தேன். கரைகளை இணைத்த அந்த ராட்சத மரம் ஒரு பட்டை மீதமின்றிக் காணாமல் போயிருந்தது. ஆற்றின் சலசலப்பு என்னைக்  கலங்கச்செய்தது. வேகமெடுத்துப் பாயும் அதன் நினைவுகளில் எவர் தான் தங்கப்போகிறார்? கண்களைத் துடைத்துக்கொண்டேன். மருத மரம் இருந்த இடத்தில் ஒரு குழி வெட்டப்பட்டிருந்தது. தாத்தா எதிர்ப்பின்றி அதில் இறங்கிக்கொண்டிருந்தார்.














Comments

  1. அருமை... சிறு வயதிற்குள் ஒருமுறை சென்று வந்தேன்.... மறைமுகமாக ஊர் திரும்பும் ஆர்வத்தை அதிகபடுத்திவிட்டது...

    ReplyDelete
  2. நலலாருக்குணே ������

    ReplyDelete
  3. அழகான காட்சியமைப்பு.. தெய்வமாக வணங்கிய ஒற்றை மரத்தை மனிதத்திற்காக அற்பணிக்கும் உயர்ந்த உள்ளம் எளிதில் வாய்ப்பதல்ல, லட்சியவாதங்கள் தடயமின்றி வீழ்ந்தபின் அதை ஏந்தியவர்களின் வாழ்வு இன்னும் இறுக்கமடைந்துவிடும் இந்த வரிகள் எவரையும் ஈழ இறுதி போர்களத்தை நினைவு கூற வைத்து விடும், ஆனால் என்னளவில் சந்தேகம் யாதெனில் இந்த மரத்திற்கு கூந்தற்பனை என்ற பெயர் கூறியது சரியா.?? தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் தன் இறுதி காலங்களை எண்ணிக் கொண்டிருக்கும் இம்மரங்களை தாளிப்பனை என்றே நாம் கேள்விபட்டுள்ளோம், நான் சந்தித்த மனிதர்கள், படித்த ஆய்வு புத்தகங்கள் வரை இதை தாளிப்பனை என்றே கூறப்பட்டுள்ளது. அதை மட்டும் மறு ஆய்வு செய்து கொள்ளுங்கள். பனை குறித்த அற்புதமான கதையமைப்பிற்கு அன்பு வாழ்த்துகளும் தொடர்ந்து எழுங்க.

    ReplyDelete

  4. கிராமத்து தாத்தாக்களின் வலிமை உடல் கட்டமைப்பு எப்பொழுதுமே ஒரு வியப்புதான்
    கூந்தல் பனை - தாத்தா. சிறப்பு

    ReplyDelete
  5. அருமை தலை. Ex.ஐ.என்.ஏ இல்லாவிடினும், எனது தாத்தா தான் எனது ஹீரோ. ஓய்வு பெற்ற ஆசிரியரான அவருக்குத் தெரியாத வேலைகளே இல்லை. கயிற்றுகட்டில், நாடாக்கட்டில் பின்னுவதில் இருந்து, வண்டியாட்டின் கயிறுக்கு கொண்டை தைப்பது வரை அவ்வளவு நறுவிசாக செய்வார்.

    பஞ்சாயத்து முடிவு சொல்லி தண்டிக்க அடிப்பது போல குற்றவாளி மீது துண்டை விசிறி அடிப்பதே அவ்வளவு அழகாக இருக்கும்.

    அதேபோல் அந்த ஆற்றங்கரையும்....

    பல நினைவுகளை மீள் உருவாக்கம் செய்ய உதவியதற்கு நன்றி. 🙏

    ReplyDelete
  6. அருமை. படம் பிடித்து காட்டிவிட்டீர்கள்.

    ReplyDelete
  7. அருமை சகோ
    எனது தாத்தாவின் நினைவுக்கு இழுத்து சென்றுவிட்டது
    அவரும் பட்டாளத்தில் இருந்தவர் தான்.

    அவர்களின் மனநிலையே தனித்துவமானது தான்.

    கோபாலன் பிள்ளை INA என்று எழுதுவது தான் அவர் வழக்கம்.

    அவர் இறந்தபின் அவரின் படங்களிலோ சமீபத்தில் வரைந்த ஓவியத்தில் கூட ஐஎன்ஏ என்று எழுதாதை பிழையாக எண்ணுகிறேன்.

    ReplyDelete
  8. அருமை சகோ..வாழ்த்துகள்

    ReplyDelete
  9. சிறப்பு ❤️

    “கூந்தல் பனையைப் போல் தாத்தாவும் தனது வாழ்வில் ஒரே ஒருமுறை பூத்தார். அது துப்பாக்கி ஏந்தியபடி மலாய்க்காடுகளில் சுற்றியலைந்தபோதல்ல,கோடாரியை பிடித்தபடி ஆற்றங்கரையில் வியர்வை வழிய வழிய நின்றிருந்தபோது”

    ReplyDelete
  10. Highly visualising reading experience செம்மண்ணா❤️ வாழ்த்துக்கள்🤝

    ReplyDelete
  11. அருமை சகோ. அற்புதமான கள அமைப்பு. 👌

    ReplyDelete
  12. மனசு கனத்துக் கிடக்கு வேல்முருகா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆயிரத்தோரு மின்மினிகள் - சிறுகதை.

செவலை- சிறுகதை