செவலை- சிறுகதை







                        1


அருகு கூட முளைத்திடாத இறுகிய வரப்பின் மீது நகர்ந்த சாரையின் தோலில், காய்ந்த வயலில் ஊர்ந்த சாணி வண்டுகளின் கரங்களில், கறுமையேறி வெம்பி வீழ்ந்த நுணாப் பழத்தின் சதைப்பற்றில், கூடி வந்த இரவில்,கோபியின் பாத வெடிப்புகளில் நுழைந்துத் தங்கியிருந்த வண்டல் மண் துகளில், எதில் தான் மீதமில்லை? அன்றைய பகலின் கருணையற்ற உஷ்ணம். தாடிமயிர் கழுத்துவரை படர்ந்து, குடல் உருவும் பிச்சுவாக் கத்தியைப் போல் நீண்ட வளைந்தக் கொம்புகளையுடைய அந்த செவலைக் கிடா தொலைவில் தெரிந்தப் பட்ட மரம் ஒன்றை நோக்குவது போல் படுத்திருந்தது. அதன் பார்வையில் ஒளி குன்றியிருந்து. அதனுடைய வயிறு ஏறி ஏறி இறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தபடி கோபி நீண்ட நேரமாக அங்கு நின்றிருந்தான். ஆட்டின் காதின் மீது வந்தமர்ந்த பூச்சி ஒன்றினை கையில் வைத்திருந்தத் தொரட்டிக் கம்பினால் தட்டிவிட்டான். அந்த செவ்வாட்டின் முகம் இப்போதெல்லாம் அவனுக்கு வயது முதிர்ந்த மனிதன் ஒருவனின் முகத்தை நினைவூட்டுகிறது. பெருசு என்று தான் அதை அவன் அழைக்கிறான்.

திருவாடானை இடையன் வயலில் இருக்கின்ற சுப்பிரமணியனுக்குச்  சொந்தமான ஆடுகளைத்தான் கோபி கிடைபோட கந்தசாமி என்பவரோடுச் சேர்ந்து பட்டுக்கோட்டைக்கு ஓட்டி வந்திருந்தான். கந்தசாமி சுப்ரமணியத்தின் உறவினர். தை அறுவடை முடிந்து ஏதேனும் பால் வண்டியிலோ அல்லது லாரியிலோ ஆடுகளை ஏற்றிக்கொண்டு வந்தார்கள் என்றால் மீண்டும் ஆடி பட்டம் விதைக்கும் காலத்தில் தான் ஊர் திரும்புவார்கள். பல ஆண்டுகளாக கோபிக்கு சுப்ரமணியத்தின் ஆடுகளுடன் தான் பிழைப்பு. அவனுக்கு விபரம் தெரிந்த காலத்திலிருந்து எனக் கூறுவது ஏற்புடையதாக இருக்காது. இப்போது வரை அவனுக்கு மனித ஆணுருப்பிற்கு இருக்கக்கூடிய கூடுதல் பணி என்னவென்பதேத் தெரியாது. குடுவை போன்றிருக்கின்ற வானத்திற்கு உள்ளே தான் பூமி இருக்கிறது, நிலவும் சூரியனும் வேறு வேறல்ல. கிருஷ்ணரின் வாய் ஆகாயத்திற்கு மேல் இருக்கிறது. அது எல்லாவற்றையும் விட பெரியது. இறந்த ஆட்டின் விரையிலிருந்து தான் பனை மரம் முளைக்கிறது என்றெல்லாம் கூட நினைத்துக்கொண்டிருந்தான். இப்போது பரவாயில்லை பத்து வயது வரையிலும் உடலெல்லாம் புண் மண்டிக் கிடந்தான். என்நேரமும் விரல் சூப்புவான். வாய் அடிக்கடி ஒரு பக்கமாக இழுத்துக்கொள்ளும். அருகில் செல்லமுடியாத அளவிற்கு அவனிடமிருந்து எச்சில் நாற்றம் வீசும். மூளைக் குறைபாடும் உண்டு. தேற மாட்டான் என்று அவனை அவனுடைய வீட்டினர் இடையன் வயலில் இருந்த அவனது பாட்டியிடம் விட்டுவிட்டு போய்விட்டனர். அவன் தன்னை அடுத்த பிறவியிலாவது வாசமுள்ள ஜீவனாக ஆக்கும்படி கிருஷ்ணரை அன்றாடமும் வேண்டுவான். பூச்செடியாகப் பிறப்பெடுப்பது எளிதில் வாய்க்காத நல்லூழ். குறைந்தது ஓரறிவுகொண்ட புல்லாகப் பிறந்திருக்கலாம். அதைக் கசக்கினால் கூட துர்நாற்றம் எழுவதில்லை. மனிதன் மட்டும் தான் பிறந்த நிமிடம் தொடங்கி வாழும் காலம் நெடுக்க சீர்கேடடைந்து வாடையின் ஊற்றாக இருக்கிறான். அவனது ஒரு துவாரத்தில் கூட சுகந்தம் வெளிப்படுவதில்லை எனும் போது அவன் எப்படி உயர்பிறவியாவான். இறந்த பின்னரும் அவன் நாற்றத்தின் பெரும்பிண்டமாகவே மண்ணுக்குள் புதைகிறான். கோபி கிழவியோடு ஆடு மேய்க்கச் சென்ற பிறகு வாழ்வில் தனக்கென்று விதிக்கப்பட்டக் காரியம் எதுவொன்று மெல்ல விளங்கிக்கொண்டான். கிடாக்களிடமிருந்து வருகிற மொச்சை வாடை அவனுக்குப் பிடித்திருந்தது. ஆடுகளும் அவனிடம் முகம் சுளிக்கவில்லை. அவை மனிதனின் புற ஒழுங்கையும் புத்தித்தெளிவையும்  பொருட்படுத்துவதேயில்லை. ஒருவன் எத்தனை அலங்கோலமான தோற்றத்தில் இருந்தாலும் சரி, இலை தழையை ஒடித்து நீட்ட கரங்களும்,நல்ல வனப்புடைய புட்தரைக்கு அழைத்துச் செல்லும் திறமையும் மட்டும் அவனுக்கு வாய்த்திருக்குமெனில் அவனே அவற்றிற்கு இறை தூதன். ஏசுவும்,கோபியும் ஆடுகளுக்கு ஒன்று தான்.

செவலையின் கண்களில் இப்போது அகோரமான பாவனை ஒன்று வெளிப்பட்டது.மூச்சும் வேகமாக இரைந்தது. நாமம் வரையப்பட்டதைப் போல் அதன் நெற்றியில் இருந்த வெள்ளைக்கோட்டினை பார்த்தபடி அவன் நின்றிருந்தான்.அதை கண்ணபிரானே இட்டிருக்கவேண்டும்.சட்டைப்பையில் வைத்திருக்கும் கிருஷ்ணரின் புகைப்படத்தை தினம் காலையில் பார்க்கும் போது அவனுக்கு அப்படித் தான் தோன்றும். அவன் பட்டியடித்திருக்கும் இடத்திற்கு நடந்து வந்தான். அவனுக்கு வாயோரத்தில் எப்போதையும் விட அப்போது அதிகமாக கொடுவாய் வடிந்துகொண்டிருந்தது. கண்ணீரைப் போல் அவனுக்கு எச்சில். மகிழ்ச்சியையும் துக்கத்தையும் அதன் மூலமாகவே வெளிப்படுத்துவான். கிடையில் படுத்திருந்த முன்னூறுக்குக் குறைவில்லாத செம்மறிகளும், இரண்டு கொடி ஆடுகளும் செவலை எங்கோ காலாற சுற்றித்திரிகிறது என நினைத்து அசைபோட்டுக்கொண்டிருந்தன. கந்தசாமி வடித்து வைத்திருந்த சோற்றைப் பிசைகையில் கோபிக்கு செவலை அருகில் வந்து சோற்றுக்குண்டானைப் பார்ப்பது போல் பிரமை ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் அதற்கு சோறு பிசைந்து வைப்பான். செவலையை மட்டும் கிடையில் அடைக்கவே மாட்டான். ஏனெனில் பெயருக்குத்தான் அவன் அந்த ஆடுகளுக்குக் கீதாரி. மற்றபடி அந்த உருப்பிடிகளுக்கு செவலை தான் எல்லாம்.



                          2

"அப்புச்சி..அது என்னா..நெருப்பு மாதிரி.நவந்து போவுதே"

முதன்முதலாக கிடைபோட வந்திருந்த சமயத்தில் கோபி பொட்டலின் இருளில் தொலைவாகத் தெரிந்த ஓர் ஒளியைக் காண்பித்து கந்தசாமியிடம் அது என்னவென்றுக் கேட்டான். அப்போது கந்தசாமிக்கு எப்படியாவது கோபியை ஊருக்கு விரட்டி விட வேண்டும் என்கிற எண்ணமே இருந்தது. இந்தக் கிறுக்கனை மாமா தனது தலையில் கட்டிவிட்டிருக்கிறாரே என உள்ளுக்குள்ளயே வெந்துகொண்டிருந்தார். அவனிடமிருந்து எழுகிற கவுச்சி நாற்றத்தை அவரால் சகிக்கவே முடியவில்லை. முந்தைய நாள் மாலையில் ஆடுகளை ஒரு வயலிலிருந்து இன்னொரு வயலிற்கு ஓட்டி வருகையில் அவை ஓரிடத்தில் பாதையிலிருந்து விலகி வாய்க்காலில் இறங்கி மீண்டும் அப்பாதையில் ஏறின. ஏன் அவ்வாறு செய்கின்றன என கோபி கேட்டபோது அங்கு ஒரு பேய் நின்றுகொண்டிருக்கிறது, அதனால் தான் ஆடுகள் வாய்க்காலில் இறங்கி அவ்விடத்தை கடக்கின்றன எனக் கூறினார். கோபி நடுங்கிவிட்டான்.
கந்தசாமிக்கு அது ஞாபகம் வந்தது.


"கொள்ளிவாப் பிசாசு" நமட்டுச் சிரிப்புடன் கூறிவிட்டு மீண்டும் தனது கட்டிலில் அயர்ந்து கொண்டார்.

"கொள்ளிவாயனா.."

செந்நிறக் கங்கு ஒன்று தொலைவில் அசைந்து அசைந்து நகர்ந்துகொண்டிருந்தது.நீரோடையைக் கடந்த யானையின் தோலினைப் போல் கருமை பெருக்கெடுத்திருந்த அச்சாமத்தில் அச்சத்தினால் கோபிக்கு தொண்டை வரண்டுவிட்டது.

"இங்க வந்துருமா?"

"பின்ன வராம..உனக்கு இங்க சரியா வராதுனா கேக்கிறியா.."

கோபி கயிற்றுக் கட்டிலில் தலையைக் கவிழ்த்துக்கொண்டான். அவனது வாய் வழக்கத்தை விட வேகமாக இழுத்தது. இடையிடையே முகத்தைத் திருப்பி அந்த ஒளி உலாவிய இடத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். பின்னரவில் மெலிதாக உறக்கம் கலைந்துக் கிடையை நோக்கியபோது அவனுக்கு உடல் மொத்தமும் சிலிர்த்து வயிறு கலக்கிவிட்டது. கரிய உருவம் ஒன்று கிடைக்கு அருகில் நின்று ஆடுகளையும் அவனையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருப்பது போல் அவனுக்குத் தெரிந்தது. அதன் கண்களிலும் அகண்ட வாயிலும் தீக்கங்கு தகித்துக்கொண்டிருந்தது.

"அப்புச்சி.."
கோபி கூச்சலிட்டான்.

கந்தசாமி விழித்துப் பார்த்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டார். அந்த உருவம் அங்கிருந்து நகரத்தொடங்கியதும் கிடையில் இருந்த ஆடுகள் அதன் பின்னால் வரிசையாக அணிவகுத்துச் செல்லத்தொடங்கின.
கோபி தொரட்டிக் கம்பை எடுத்துக்கொண்டு ஆடுகளைப் பிடித்துவர விரைந்தான். அவனது கட்டம் போட்ட நைந்த சட்டையும் லுங்கியும் மட்டும் ஓடிக்கொண்டிருப்பதைப் போல் உடல் அழுத்தமின்றி அலங்கோலமான கோணத்தில் அவன் ஓடினான். அந்த உருவம் வேகமெடுக்க ஆடுகளும் அதன் பின்னால் சீறிப்பாய்ந்தன. அவற்றின் குளம்புகள் பதிந்த இடங்களிலிருந்து இரவையே மறைக்கும் படி வண்டல் புழுதி கிளம்பியது. கோபி திக்குதிசைத் தெரியாமல் அவற்றை விரட்டியபடி பறிந்துகொண்டிருந்தான். வரப்பொன்றில் அவன் இடரி வீழ்ந்தபோது சற்று அருகில் தெரிந்த ஒரு செம்மண் மேட்டின் மீது அந்த உருவம் இரண்டு தென்னை மர அடி உயரத்தில் வளரந்து நின்றுகொண்டிருப்பதைக் கண்டான். அதன் கண்கள் எரியூட்டப்பட்ட தேங்காய்களைப் போல் ஜொலித்தன. அதன்பிறகு அங்கிருந்து எழுந்து அவன் எவ்வளவு ஓடியும் அந்த மேட்டுப்பகுதியை அவனால் எட்டவே முடியவில்லை. இப்போது அந்த உருவத்தின் காலடியில் நின்ற ஆடுகளின் முகமும் குருதிச்சிவப்பில் ஒளிரத்தொடங்கியிருந்தது. அத்தனை நூறு கண்களும் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தன..'மே..என்று அவ்விடமே கலங்கும் படி ஒற்றைக் குரலில் கனைத்தன. அவை தனது பற்களைக் கடித்து முறைத்தபோது நடுக்கத்தில் அவனுக்கு மூத்திரம் வழிந்துவிட்டது. அவன் செய்வதறியாது வெடவெடத்துப் போய் நின்றுகொண்டிருந்தான். ஆடுகள் ஒவ்வொன்றையும் உயர்த்திப்பிடித்து அந்த உருவம் விழுங்கத்தொடங்கியதும்
ஆ..ஊ என்று கூப்பாடு போட்டுக் கத்தினான். அப்போது செவலைக்கு ஒரு வயது கூட நிறைவடைந்திருக்கவில்லை. திடீரென அது அவன் முன்னால் வந்து அவனது கால்களில் முட்டி கிடை போட்டிருந்த இடம் நோக்கி அழைத்தது. எதையோ புலம்பியபடி அவன் செவலையை பின்தொடர்ந்து நடந்தான். திருநீறு பூசப்பட்டதைப் போல் இருண்ட வானம் மீது சிறிது வெண்மை படர்ந்திருந்தது.சற்று தொலைவில் இருந்த சவுக்குத் தோப்பில் துயில்கொண்டிருந்த பறவைகள் உறக்கம் கலைந்து முணுமுணுத்துக்கொண்டிருந்தன. கிடையில் ஆடுகள் வழமைபோல் இயல்பாக படுத்துருப்பதைக் கண்டதும் கோபிக்கு ஆச்சரியம். அந்த அதிகாலை விடியலிலிருந்து செவலை அவனுடைய மேய்ப்பராகியிருந்தது.

செவலைப் பிடரி மயிர் சிலுப்பி வளர வளர கோபியின் தனிமையும் அவனிடமிருந்து தூரம் சென்றது. இரவுகளில் அது அவனது கால்மாட்டிலயே படுத்துக்கொள்ளத் துவங்கியிருந்தது. அவன் சிறுநீர் கழிக்க எழுந்து சென்றாலும் அது கூடவே நடந்து வரும்.அதற்காக அவன் வாங்கி வருகிற கடலை மிட்டாயை கைலி மடிப்பிலிருந்து எடுத்த நொடியில் எங்கிருந்தாலும் அது தலையை ஆட்டிக்கொண்டு ஓடிவரும்.அது கடலை மிட்டாயை நொறுங்க நொறுங்க மென்று விழுங்குவதைப் பார்ப்பதில் கோபிக்கு ஒருவிதமான மனக்கிளர்ச்சி ஏற்பட்டது.
புத்தி மங்கிய செம்மறி ஆடுகளுக்கு வழிகாட்ட அந்த மந்தையில் இரண்டு கொடி ஆடுகளும் இருந்தன,இருந்தும் அவற்றை விடவும் செவலை திறமையான முன்வரிசை ஆடாக உருவாகிவிட்டது. கிடை போடுகிற இடத்திலோ அல்லது வயல் வரப்புகளிலோ பாம்பு, நட்டுவாக்கிலிப் போன்றவை எதிர்பட்டால் மற்ற ஆடுகளைப் போல் அது அஞ்சி ஓடாது.தனது முன்னங்காலை மண்ணில் சீய்த்தே அந்த விஷப் பிராணிகளை விரட்டி ஓட வைத்துவிடும்.

                               3

செவலை வாலிபப் பருவத்தை அடைந்தபிறகு ஒரு தலைமை ஆட்டிற்குரிய பண்புகள் அனைத்தும் அதனிடம் வந்துசேர்ந்திருந்தது. சோடையான ஆடுகளை முட்டித்தள்ளும் கிடாக்களிடம் சென்று நாட்டாமை செய்து அவற்றை அடக்கி வைக்கும், அநாவசியமாக பெட்டைகளை விரட்டாது;மிகவும் அரிதாகவே புணர்ச்சியில் ஈடுபட்டது. தான் அந்த மந்தையின் தலைவன் என்கிற தோரணையை அது வரவழைத்துக்கொண்டது. பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மதுக்கூர் என ஒவ்வொரு ஊர்களாக கிடையில் தங்கி புஞ்சைககளுக்கு உரமிடுகிற அவ்வாடுகள் பயிர் நடவுமுடிந்த பிறகு மீண்டும் திருவாடானைக்குத் திரும்பி விடும். அலைச்சலின் சம்பளம் உறக்கம். அக்காலங்களில் கோபி நன்றாக ஓய்வு எடுத்துக்கொள்வான். ஆடுகள் அனைத்தும் சுப்பிரமணியத்தின் வீட்டிற்கு பின்புறம் இருக்கக்கூடிய பட்டியில் தங்கிக்கொள்ளும். ஆனால் அப்போதும் கூட செவலை மட்டும் கோபியின் வீட்டிலயே அவனோடு குடிகொண்டிருக்கும். கோபிக்கு சம்பளம் என்று எதுவும் விதிக்கப்பட்டிருக்கவில்லை.சுப்ரமணியன் கோபியின் பாட்டிக்கு அவ்வப்போது ஏதாவது பணம்காசு கொடுப்பார்.

மீண்டும் தஞ்சை மண்ணில் ஆறுமாத கால கிடை வாழ்க்கை.அதைத் தொடர்ந்து சொந்த ஊரின் வெக்கை உமிழும் காற்றில் இளைப்பாறுதல் என செவலையும் கோபியும் யதுகுலத்தின் சஞ்சித கருமத்தினால் அலைக்கழிக்கப்பட்டனர். கோபி ஆடுகளை மேய்ப்பதில் கெட்டிக்காரன், மற்றபடி அவனோடு கட்டி உருளவாப் போகிறோம் என கந்தசாமியும் அவனை சகித்துக்கொள்ளத் தொடங்கியிருந்தார். மேய்ச்சல் பொறுப்பை முழுவதுமாக அவனிடம் விட்டுவிட்டு எங்காவது குடித்துவிட்டு உறங்கிக்கிடக்கலாம்,எதுவும் கேட்க மாட்டான் என்கிற கூடுதல் அனுகூலம் வேறு.

ஆம்பலாப்பட்டிற்கு கிடை போட வந்திருந்த சமயத்தில் அவ்வூரைச் சேர்ந்த மாசே துங் என்பவர் செவலையை விலைக்கு கேட்டார்.
முட்டுக் கிடாவாக பயிற்றுவித்தால் அருமையாக வரும் என்பது அவரது எண்ணம்.இரண்டு முறை குறிப்பிட்ட விலைக்குக் கேட்டுப்பார்த்துவிட்டு இறுதியாக எவ்வளவு விலைகொடுத்து வேணாலும் வாங்கிக்கொள்வதாக கூறியபோது கந்தசாமிக்கு ஏக சம்மதம்.
ஆனால் கோபி கத்திக் கூப்பாடு போட்டு அந்தக் கிரயத்தைக் கெடுத்துவிட்டான்.


"ஏன்டா.ஆடு என்ன அம்பது வருசம் இருக்குமா.முத்திப்போயிட்டுனா உப்புக் கண்டமாக ஆவுறது தானே."

கந்தசாமி கூறியதைக் கேட்டு கோபிக்கு மனம் கனத்தது.அன்றிலிருந்து செவலையின் கொம்புகள் தொடங்கி அதன் பற்கள்,விரைகள் எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்கலானான். அதற்கு வயதாகிவிடுமோ என அதனுடைய தாடியை அவ்வப்போது சிரைத்துவிட்டான். இருந்தும் அவனது முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போயிருந்தது. மழைநீராலும் காற்றாலும் நகரும் மண் துகள்கள் எதிர்படும் பள்ளத்தினை சிறுகச் சிறுக தூற்பதைப் போல் காலம் செவலையை ஆர்ப்பாட்டமில்லாமல் வாழ்நாளின் இறுதியில் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது .அதன்பிறகு நடை தளர்ந்து அது மந்தையின் இடப்பெயர்வுகளில் பின்தங்கியது. இறுதியாக அன்றிரவில் தண்ணீர் கூட எடுக்காமல் சோர்ந்து சாய்ந்துவிட்டது.

கோபி சாப்பிட்டு முடித்து கையலம்பிவிட்டு செவலையிடம் வந்தான்.

"அப்புச்சி..அப்புச்சு..."
மீண்டும் அவன் கந்தசாமியிடம் ஓடிவந்தான்.

" சொன்னா கேட்டா தான..ஒலகத்துலயே இல்லாத ஆடுனு..அறுப்புக்கு இப்ப எங்க கண்டு ஆளு பிடிக்க..தொலையுது போ" அருகில் வந்துப் பார்த்தவிட்டு கந்தசாமி சிடுசிடுத்தார்.

"அப்புச்சி.. பெருசு? "

"செத்துப்போய்ட்ரா. "

சாதாரணமாகக் கூறிவிட்டு கந்தசாமி தொலைவில் தெரிந்த பம்பு செட்டிற்கு நடந்தார்.வரும்போது அவரது கையில் ஒரு மண்வெட்டி இருந்தது.கிடைக்கு சற்று தொலைவில் இருந்த தரிசு நிலத்தில் செவலையைப் புதைத்தனர்.கந்தசாமிக்கு அடக்கமுடியாத எரிச்சல்.மண்வெட்டியைக் கொடுத்து வருவதாகக் கூறிவிட்டு அகன்றவர் திரும்பி வருவதற்கு தாமதமானது.கோபி கட்டிலில் அமர்ந்திருந்தான்.உணர்வுகள் இருக்கும்போதே அவனை எவரோ இடுகாட்டில் புதைத்துவிட்டுச் சென்றதைப் போல் முண்டிக்கொண்டிருந்தான். முடிவுறாதத் தனிமை மீண்டும் அவன் மீது படர்ந்துகொண்டிருந்தது.

                               4

அடித்துப் பெய்துகொண்டிருந்த மழையில் ஆட்டுப்புழுக்கைகள் சொத சொதவென ஊறிக்கிடந்தன.கிடையின் மீது படுதாவை விரித்துப்போட்டுவிட்டு கோபியும் அதற்குள் ஒண்டியிருந்தான்.வானத்தைக் கிழித்துக்கொண்டு பாறைகள் வீழ்வதைப் போல் இடியோசை நெருக்கமாகக் கேட்டது.கிடை அடிக்க ஊனப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளில் இடி வீழ்ந்தாலும் ஆச்சரியமில்லை.படுதாவைத் துளைத்துக்கொண்டு மின்னலொளி உள்ளே வர ஆடுகள் ஓரிடத்தில் நிலைகொள்ளாமல் ஓடின.செவலைக்கு இணையாக இப்போது ஒரு கிடாவும் அங்கில்லை.

கோபியை அந்த வயலில் இருந்த கொட்டகைக்கு வரக்கூடாது எனக் கூறிவிட்டு தான் கந்தசாமி போயிருந்தார்.அந்த வயலுக்கு கிடைபோட வந்ததிலிருந்து தினம் இரவில் அவர் கொட்டகைக்குள் ஒரு குறத்தியோடு என்ன செய்துகொண்டிருக்கிறார் என்கிற விபரம் கோபிக்குத் தெரியாது.இப்போது அவனுக்கு குளிரில் உடல் நடுங்கத்தொடங்கியிருந்தது. வெளியே வந்த வேகத்தில் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு நேராக கொட்டகைக்கு ஓடினான். தட்டியைத் திறந்துகொண்டு உள்ளே சென்றதும் அங்கு மண்ணில் ஒரு சாக்கை விரித்து அதில் குறத்தியோடு புரண்டு கொண்டிருந்த கந்தசாமி ஆத்திரத்துடன் அவனை ஏறிட்டார்.

" மடக் கூதி..ஏன்டா இங்க வந்த ?"

"அப்புச்சி.. வெளிய மழய பாத்தியல்ல.
ஆமாம் நீங்க என்ன செய்றிய..கைலிய தூக்கிகிட்டு"

தரையிலிருந்து எழுந்த கந்தசாமி லுங்கியை உயர்த்திக் கட்டிக்கொண்டு நேராக கோபியிடம் வந்து அவனை வெளியே எட்டி உதைத்தார்.

" ஏ.... ஐயோ ஐயோ "கோபி சேற்றில் கிடந்துப் புரண்டான்.

".உள்ள வந்துப் பாரு. கொண்டேபுடுறன். "

கந்தசாமி மீண்டும் கொட்டகைக்குள் வந்து தட்டியைச் சார்த்திவிட்டு அதன் முன்னால் உள்ளே இருந்த ஒரு மூட்டையை நகர்த்தி வைத்தார். கோபி அத்தனை மழையையும் பொருட்படுத்தாமல் வரப்பில் இறங்கி ஓடினான். மூச்சிரைந்து நின்றபோது நிழலுக்கு ஏங்கி வந்து கல்லடிபட்ட நாயைப் போல் ஓலமிட்டபடி அழுதான். ஆற்றாமையில் மார்பு மேலும் கீழும் ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. வாயெல்லாம் எச்சில் வடிய வானத்தைப் பார்த்து பிராத்தனை செய்தான். இத்தனை நூறு மின்னல்களில் ஒன்றுக்குக் கூட என் மீது கருணையில்லையா. அவற்றில் ஒன்று இப்போது என் மீது பாய வேண்டும். அரைநொடியில் சாம்பலாவது கொடுப்பினை. அதுவே பகவான் எனக்களிக்கும் வரம். இந்த அனாதை உடலோடுச் சேர்ந்து மின்னலும் இந்த பூமியும் நாற்றமெடுக்கவேண்டும். அவன் கைகளை கூப்பியபடி நின்றான். மழை இன்னும் தீவிரம் பெற்றிருந்தது. பளீர் என்றொரு மின்னல். அதன் வெளிச்சத்தில் அவன் அதைக் கண்டான். அவனெதிரில் ஒரு செவ்வாட்டுக்குட்டி உடல் ரோமங்கள் மொத்தமும் மழையில் நனைந்து உடலோடு உடலாக ஒட்டிய நிலையில் வந்து நின்றது. அது செவலையின் வித்தா? கோபி குழம்பி நின்றான்.அந்த கொடும்மின்னலுக்குரிய இடிச்சத்தத்தில் அந்த ஆட்டுக்குட்டி அலறித்துள்ளி விழுந்தது. கோபி அதனிடம் ஓடினான்.அடுத்த மின்னல் வெட்டியது.அப்போது அதன் நெற்றியில் நாமமிட்டதைப் போல் ஒரு வெள்ளைக்கோடு இருப்பதைக் கண்டு ஓவென்றுக் கத்தினான். எச்சிலாக மகிழ்ச்சிப் பெருக்கெடுத்து வழிய அதை மழை மண்ணுக்கு வடித்துச்சென்றது. அந்த மழையில் அவனை நனைத்தத் தூரல்களுக்குத் தெரிந்திருக்கவில்லை அவன் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியவன் என்பது. இங்கு பிறந்திளைக்கின்ற உயிர்கள் ஒவ்வொன்றையும் பூமி தூர விலக்கி வைத்தாலும் அவற்றை ஆகாயம் காற்றெனும் தனது கரங்களைக்கொண்டுப் பிணைக்கிறது.மேகங்களைப் உருக்கி நீர்கொண்டுக் கோக்கிறது. கடலும்,மலையும்,வளம் செறிந்த தேசங்களும் எட்ட முடியாத தொலைவில் இருந்தாலும்,நிலவும்,வெள்ளிகளும் தலைக்கு மேல் கிடக்கின்றன. அடுத்த மின்னலுக்கு அவன் அங்கில்லை. அது தனக்கு விடுதலை அளித்துவிட்டதாக எண்ணினான். இல்லை. நான் என்கிற விழிப்புநிலை இன்னும் இருக்கிறதே என்கிற வியப்படைந்தான். ஆட்டுக் குட்டி அவனது காலருகில் வந்திருந்தது. அதை உயரத் தூக்கி மழையில் நனைய விடாமல் மார்பில் அணைத்தபடி விரைந்தான். இப்போது எதன் மீதும் இடி வீழ்ந்துவிடக் கூடாது என வானத்தை வேண்டியபடி பரபரத்தான். வரப்புகளில் வழுக்கிச்சென்றான். அவனுடலின் அத்தனை வலுவும்,பரிவும் அவனது நலிந்த கரங்களுக்கு இடம்மாறியிருந்தது. பால்வெளியைப்போல் முடிவற்றக் கிடந்த அந்த வண்டல் நிலத்தில் ஓர் உயிரற்றக் காகிதத் துண்டாய் அவன் நகர்ந்தான். அந்த செவலைக் குட்டியை நெஞ்சில் இறுக்கியபடி இடியில் அதிர்ந்து,வெளிச்சத்தில் மிளிர்ந்து அவன் ஒவ்வொரு மின்னலையும்,ஒவ்வொரு துயரையும் கடந்து அந்த இருள்படர்ந்த ஏகாந்த வெளியில் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தான்.

Comments

  1. அருமை.... 'ஏசுவும்,கோபியும் ஆடுகளுக்கு ஒன்று தான்' - 👌👌👌

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கூந்தல் பனை-சிறுகதை

ஆயிரத்தோரு மின்மினிகள் - சிறுகதை.